Bus strike come to an end today
போக்குவரத்துத் தொழிலாளர்கள் – உயர்நீதிமன்றம் இடையே இன்று ஒரு இணக்கமான சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஓய்வூதிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். 2.57 மடங்கு ஊதிய உயர்வு அளிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொ.மு.ச., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள் கடந்த 4 ஆம் தேதி முதல் பேராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் அரசு பஸ் போக்குவரத்து முடங்கி உள்ளது.

இதனால் அலுவலகங்களுக்கு செல்வோர், வெளியூர் செல்வோர், மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறைவான பஸ்களே ஓடியதால் அதில் பயணிகள் முண்டியடித்துக்கொண்டு பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. இந்த போராட்டம் இன்று 7 ஆவது நாளாக நீடிக்கிறது.
இந்த நிலையில், சட்டசபையில் நேற்று விதி எண் 110-ன் கீழ் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓய்வுபெற்ற போக்குவரத்து துறை தொழிலாளர்களுக்கு ரூ.750 கோடி நிலுவை தொகை பொங்கல் பண்டிகைக்கு முன் வழங்கப்படும் என்று அறிவித்ததோடு, தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.


இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கை விரிவாக விசாரித்து தீர்ப்பு அளிக்கலாம் என்ற போதிலும், இந்த நேரத்தில் மக்கள் நலனை கருத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. தொழிலாளர்கள் 2.57 மடங்கு ஊதிய உயர்வு கேட்கும் நிலையில் அரசு 2.44 மடங்கு ஊதிய உயர்வுக்கு ஒப்புதல் அளித்துவிட்டது. 0.13 மடங்கு ஊதிய உயர்வுதான் பிரச்சினையாக இருந்து வருகிறது. அரசு உடனடியாக 2.44 மடங்கு ஊதிய உயர்வை அமல்படுத்தட்டும். தொழிலாளர்கள் உடனடியாக வேலைக்கு திரும்ப வேண்டும் என்றார்.
பொங்கல் பண்டிகை நேரம் என்பதால் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பஸ்களை இயக்க வேண்டும் என்பதே கோர்ட்டின் விரும்பம். எனவே யோசித்து ஒரு நல்ல முடிவை இன்று தெரிவியுங்கள் என்றும் நீதிபதி கூறினார்

அரசு தெளிவான முடிவை அறிவிக்கும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. ஆனாலும் பொங்கள் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டும், சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்பதாலும் இன்று போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களது வேலை நிறுத்தப் போராட்டத்தை விலக்கிக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
