Government buses have been increased by the Government of Tamil Nadu.

7 வருடத்திற்கு பிறகு பேருந்து கட்டணம் தற்போதுதான் உயர்த்தப்பட்டுள்ளது எனவும் அதனால் கட்டண உயர்வை வாபஸ் பெற திட்டமில்லை எனவும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

அரசு பேருந்துகளின் கட்டணங்கள் அதிரடியாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உயர்த்தப்பட்ட கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 

ஊதிய உயர்வு, நிலுவை தொகை, ஓய்வூதியம் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் சில நாட்களுக்கு முன்பு வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆனால் அவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்க போக்குவரத்து துறையில் நிதி இல்லாததால் முழுமையாக உடனே வழங்க முடியவில்லை என அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர் காரணம் கூறி வந்தார். 

இதனால் ஊழியர் போராட்டம் நீட்டித்து கொண்டே சென்றது.மக்களின் நிலையை கருத்தில் கொண்டு போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர் போக்குவரத்து ஊழியர்கள். 

இந்நிலையில் தற்போது திடீரென தமிழக அரசு பேருந்து கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இதனால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது. 

இதற்கான காரணத்தையும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதாவது பேருந்துகளின் உதிரி பாகங்களின் விலை, டீசல் விலை உயர்வால் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 

இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வந்ததோடு கட்டண உயர்வையும் வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், 7 வருடத்திற்கு பிறகு பேருந்து கட்டணம் தற்போதுதான் உயர்த்தப்பட்டுள்ளது எனவும் அதனால் கட்டண உயர்வை வாபஸ் பெற திட்டமில்லை எனவும் தெரிவித்தார்.