நடப்பு நிதி ஆண்டின் முழுமையான பட்ஜெட் தற்போது நாடாளுமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்டுவரும் நிலையில்,  தமிழகத்தில் இருந்து பட்ஜெட் தாக்கல் செய்யும் 6வது நபர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.

மத்தியில் தனிப் பெரும்பான்மை உடன் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. கடந்த முறை உடல்நலக்குறைவால் நிதியமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட் தாக்கல் செய்யவில்லை. அவருக்கு பதிலாக பியூஸ் கோயல் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதனைக் கருத்தில் கொண்டு, இம்முறை தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்று அருண் ஜெட்லி கூறியதை ஒட்டி தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமனுக்கு நிதியமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் கடந்த பாஜக ஆட்சியில் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் தமிழகத்தில் இருந்து பட்ஜெட் தாக்கல் செய்யும் 6வது நபர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார். 

சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை அப்போதைய நிதியமைச்சராக இருந்த ஆர்.கே.சண்முகம் என்ற தமிழர் தான் தாக்கல் செய்துள்ளார். இவர் நேரு அமைச்சரவையில் 1957, 58, 64, 65 ஆகிய ஆண்டுகளில் நிதி அமைச்சராக இருந்துள்ளார். இவரைத் தொடர்ந்து, 1975ல் இந்திரா காந்தி அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த சி சுப்பிரமணியம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பின்னர் 1980, 81 ஆகிய ஆண்டுகளில் தமிழகத்தை சேர்ந்த ஆர்.வெங்கட்ராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். 1997ல் மன்மோகன் சிங் ஆட்சியில் தமிழகத்தைச் சேர்ந்த ப.சிதம்பரம் பட்ஜெட் தாக்கல் செய்தார். 

இவர்களைத் தொடர்ந்து தற்போது நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்து, தமிழகத்திற்கு பெருமை தேடி தந்துள்ளார். பட்ஜெட் அறிக்கைகளை மிரட்டலான ஆங்கிலத்திலும், அவ்வப்போது இந்தியிலுமாக முழங்கி அசத்திவருகிறார் நிர்மலா சீத்தாராமன்.