உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் கொரோனா வைரசுக்கு ஆளாகிவரும் நிலையில் பிரிட்டிஷ்  சுகாதாரத்துறை அமைச்சரும் இந்த வைரசால் கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ளார் .  மகளிர் தின விழாவில் பங்கேற்ற போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது .  சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் 90 க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவி உள்ளது .  இதில் இந்தியாவிலும்  அந்த வைரஸின்  தாக்கம் ஆரம்பமாகி உள்ளது.  இதுவரை சீனாவில் மட்டும் இந்த வைரசுக்கு  3,136 பேர் பலியாகியுள்ளனர். 

இந்நிலையில் சீன அரசு எடுத்துவரும் தொடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பலி எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது .  நேற்று முன்தினம் 17 பேர் மட்டுமே இந்த வைரசுக்கு உயிரிழந்துள்ளனர்.  உலகம் முழுக்க பலியானவர்களின் எண்ணிக்கை  4011 ஆக உயர்ந்துள்ளது.  இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47  ஆக இருந்த நிலையில் நேற்று ஒரே நாளில்  அது 61 ஆக உயர்ந்துள்ளது.  இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் மகளிர் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது .  இதில் பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் நாடின் டோரிஸ் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

 சுகாதாரத்துறை அமைச்சர் நாடின் டோரிஸ்க்கு  மகளிர் தின விழாவில் கலந்து கொண்ட பின்னர் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது .  இந்நிலையில் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் உலக அளவில் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ள அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்துள்ளதாகவும் அவர் வேகமாக குணமாகி வருவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது .