பிராமணர்களைப் பகைத்துக் கொண்டு தமிழகத்தில் யாராலும் அதிகாரத்துக்கு வர முடியாது என்று பூணூல் அறுப்பு சம்பவத்துக்கு எதிராக நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

திரிபுரா மாநிலத்தில் பாஜக வெற்றிக்கு பிறகு அங்கு அமைக்கப்பட்டிருந்த புரட்சியாளர் லெனின் சிலை பாஜகவினரால் அகற்றப்பட்டது. லெனின் சிலை அகற்றப்பட்டது குறித்து, பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழகத்தில் உள்ள பெரியார் சிலை அகற்றப்படும் என்று பதிவிட்டிருந்தார். அவரது இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சில இடங்களில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது. அதே நேரத்தில் சென்னையில் நடந்து சென்ற பிராமணர்களின் பூணூல் அறுக்கப்பட்டது.  பூணூல் அறுப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சர்ச்சை சற்று அடங்கியிருந்த நிலையில், பூணூல் அறுப்பு சம்பவத்துக்கு எதிராக கண்டனப் பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிராமணர்களுடன் இசுலாமியர்கள், கிருஸ்தவர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மயிலாப்பூரில் நடந்த இந்த கண்டன பொதுக்கூட்டத்தில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.வி.சேகர் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பிராமணர்களைப் பகைத்துக் கொண்டு தமிழகத்தில் யாராலும் அதிகாரத்துக்கு வர முடியாது என்றார்.

நாட்டிலேயே தமிழகதில்தான் பிராமணர்களுக்கு மரியாதை இல்லை. இந்த நிலைக்கு ஆட்சியாளர்களே காரணம். திராவிட கலாச்சாரத்தில் அனைத்திலும் ஊழல் மற்றும் லஞ்சம் நிறைந்துள்ளது. திராவிடக் கழகத்துக்கு துணிவு இருந்தால் ஒரு தலித் சமூகத்தவரை தலைவராக ஆக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.