பெரியார், திருவள்ளுவர் சிலை மீது காவி சாயம் பூசும் பாஜகவிற்கு பதிலடியாக கமலாலயம் மீது கருப்பு சாயம் பூச தாங்கள் தயார் என கே.எஸ்.அழகிரி ஆவேசம் தெரிவித்துள்ளார். இந்திய தேசிய காங்கிரஸின் 136வது நிறுவன நாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி 150அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி நினைவு கம்பத்தில் காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது பேசிய அவர், 150அடி உயரத்தில் நம் காங்கிரஸ் கட்சி கொடி பறப்பதை பார்க்கும் பொது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தியவிலயே மிக பெரிய உயரமான கம்பத்தில் பறக்கும் அரசியல் கட்சி கொடி என்றால் அது நம் காங்கிரஸ் கட்சியின் கொடி தான். காங்கிரஸ் கட்சியின் மாபெரும் கனவுகளை தோலில் தாங்கி ராகுல் காந்தி பயணம் மேற்கொண்டு வருகிறார்.

காங்கிரஸ் கட்சியின் தாரக மந்திரம் வளர்ச்சி மட்டும் தான். ஆசியாவில் ஜனநாயக ரீதியான வளர்ச்சி அடைந்த நாடு இந்தியா. விரைவில் தேர்தல் வரவுள்ளது ஊழல் மிக்க அதிமுக ஆட்சியை தூக்கிபோட வேண்டிய நேரம் வந்துவிட்டது. காங்கிரஸ் கட்சியின் சேவா சங்க தலைவராக ஜவஹர்லால் நேரு இருந்து இருக்கிறார். அதேபோல் ராகுல்காந்தி அவர்களும் இருந்துருக்கிறார் என்றார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மோடி அரசாங்கம் பொருளாதாரத்தில் அதளபாதாளத்தில் விழுந்துள்ளது. பொருளாதாரத்தில் சிறந்த ஆளுமை உள்ளவர்கள் பாஜகவில் இல்லை. இந்த அதிமுக ஆட்சி சுயமரியாதையை இழந்த, ஊழல் நிறைந்த, தமிழக நலன் பெற தயங்கும் ஆட்சி, உரிமையை நிலைநாட்ட முடியாமல், உரிமையை கேட்க தயங்கும் அரசு எடப்பாடி அரசு. ஊழல் ஆதாரத்தை தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநரிடம் ஒப்படைத்துள்ளார். ஆளுநர் இதன் மீது விசாரணையை துவக்க வேண்டும்.

பெரியார் சிலைக்கு காவி சாயம், திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுவது என பாஜக ஈனத்தனமாக செயலில்  ஈடுபட்டு வருகிறது. திருக்குறள் மட்டும்தான் மக்களை ஒன்றுத் திரட்டும் அறநெறியை பரப்பும். வளர்ச்சியை குறிக்க நாங்கள் ஏர் கலப்பை யாத்திரை, ஆனால் வன்முறையை தூண்ட பாஜகவினர் வேல்யாத்திரை செய்கின்றனர். காவி சாயம் பூசுவது போன்ற இரவில் திருட்டுதனமாக பாஜக செய்யும் வேலையை பகலில் நாங்கள் செய்ய தயார். பாஜகவால் எங்களை என்ன செய்து விட முடியும். தமிழகத்தில் பாஜக காவி பூசும் தவறான நடவடிக்கை எடுக்கிறது. திமுகவை ஓட ஓட விரட்ட வேண்டும் என்பது தெருவில் சண்டை போடுபவர்கள் பேசும் பேச்சு. முதல்வர் பேசும் வார்த்தை அல்ல. மக்கள் யாரை ஆதரிக்கிறார்கள் என பார்ப்போம். எம்.பி தேர்தலில் ஆதரவளித்தது போல் மக்கள் இதிலும் எங்கள் கூட்டணிக்கு வாக்களிப்பார்கள். திமுக கூட்டணி மதசார்பின்மை என்ற நேர்கோட்டில் ஒன்றாக இருக்கிறோம். எங்கள் கூட்டணி தேர் பலமாகவும், கம்பீரமாகவும் உள்ளது. 

அதிமுக பயந்து அமைதியாக உள்ளது. கூட்டணிக்குள் பயங்கர குழப்பம் உள்ளது. தனிமனித விமர்சனத்தை தான் பாஜக பேசும், கொள்கை பேச்சு ஒருபோதும் இருக்காது. ரஜினி அரசியல் வாதி அல்ல, ஆன்மீக வாதி. முதல்வராக வர விருப்பமில்லாத ஒருவர் கட்சி ஆரம்பித்தால், அவரை விரும்புவர்கள் கூட அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள். தேசிய கட்சிக்கு தமிழகத்தில் இடமில்லை என கூறும் கே.பி.முனுசாமி, முதல்வர் வேட்பாளரை நாங்கள் தான் தேர்ந்தெடுப்போம் என கூறிய வானதி ஸ்ரீனிவாசனின் பதிவுக்கு பதில் ஏன் கூறவில்லை இவ்வாறு கூறினார்.