ஜல்லிக்காடு விவகாரத்தில்  பாஜகவின் செயலால் அதிருப்தி அடைந்த மாநில இளைஞரணி துணைத்தலைவர்  தான் அப்பொறுப்பிலிருந்து  விலகுவதாக அறிவித்தார். அவரை கட்சியிலிருந்தே நீக்குவதாக மாநில இளைஞர் அணித்தலைவர் அறிக்கை விட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டு பிரச்சனை தமிழகம் முழுதும் எதிரொலித்து வருகிறது. ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்காவிட்டாலும் ஜல்லிக்கட்டை நடத்தியே தீருவோம் என்று தமிழகம் முழுதும் பலரும் கொந்தளித்து வருகின்றனர்.

பாஜக தலைவர்கள் , மத்திய அமைச்சர்கள் கடந்த ஆண்டை போலவே ஜல்லிக்கட்டு பற்றி பேசி பேசியே கடைசி நேரத்தில் கைவிரிக்கும் படி நடந்து கொள்கின்றனர். இதையும் எதிர்கட்சி , ஆளுங்கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று நடந்த ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் கலந்துகொண்ட பாஜக மாநில இளைஞரணி துணைத்தலைவர் சத்யபாமா, பேட்டி அளிக்கும் போதே தான் முதலில் தமிழன் என்ற உணர்வு உள்ளவர் அதற்கு பிறகுதான் கட்சி எல்லாம்.


ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பாஜக செயலை கண்டித்து தான் பாஜக மாநில இளைஞரணி துணைத்தலைவர் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்தார். இது நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தனது இளைஞரணி துணைத்தலைவர் பதவியை தூக்கி எரிந்த சத்யபாமாவை கட்சியை விட்டே தூக்குவதாக மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் அறிவித்து அறிக்கை அனுப்பி உள்ளார்.


அதிகமாக உணர்ச்சிவசப்பட்டதால் தான் யார் எந்த பதவியில் இருக்கிறோம் என்பதை மறந்து கட்சித்தலைவர் தமிழிசை எடுக்க வேண்டிய நடவடிக்கையை  கட்சியின் கிளை அமைப்பான இளைஞர் அணியின் தலைவர் எடுத்து அறிக்கை விட்டு கட்சியிலிருந்து மாநில நிர்வாகியை நீக்குவது கட்சித்தலைவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 இது பற்றி என்ன சொல்வது என்பது தெரியாமல் பாஜக தலைவர்கள்  விழித்து கொண்டு நிற்கின்றனர்.


இது போன்ற காமெடி வேறு எந்த கட்சியிலாவது நடக்குமா? மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தான் ஒருவரை கட்சியிலிருந்து நீக்க முடியும் அறிவிப்பு வெளியிட முடியும் . இளைஞரணி தலைவர் நீக்கி அறிக்கை வெளியிட்டிருப்பது வேடிக்கையாக பார்க்கப்படுகிறது.


அகில இந்திய அளவில் ஆட்சி நடத்தும் மிகப்பெரிய கட்சியில் நடைமுறை கூடவா தெரியவில்லை என அரசியல் விமர்சகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.