2019 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிவாய்ப்பு குறைவாக உள்ளதாக, ‘தி பிரிண்ட்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் மீண்டும் பாஜக ஆட்சிதான்; எங்களது வெற்றியை யாரும் தடுக்க முடியாது என்று அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தொடர்ந்து கூறி வரும் நிலையில், அதற்கு எதிரானதான ‘தி பிரிண்ட்’ இணைய ஊடகத்தின் ஆய்வு அமைந்துள்ளது.

2014 தேர்தலில் வெற்றிபெற்ற 64 தொகுதிகளில் மீண்டும் பாஜக வெல்வதற்கு வாய்ப்பே இல்லை என்றும், எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளும் பட்சத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கான நிலவரங்களே உள்ளன என்றும் அது கூறியுள்ளது.

காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரிய லோக் தளம், ராஷ்ட்ரிய ஜனதாதளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் ஓரணியில் திரள்வதற்கான சூழல் அதிகம் இருப்பதால், பாஜக தோல்வி பெறுவதற்கான வாய்ப்புக்களே உள்ளதாகவும் ‘தி பிரிண்ட்’ தெரிவிக்கிறது.

பாஜக-வுக்கு எதிராக, மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இணைந்தது மட்டுமன்றி, வேறு இரு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. தமிழ்நாட்டில் காங்கிரஸ் - திமுக கூட்டணியும் தொடர்ந்து வருகிறது. கர்நாடகத்திலும் இதே நிலைதான் உள்ளது. அங்கு காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் இணைந்து ஆட்சியமைத்துள்ளன.

2019 தேர்தலிலும் இந்த கூட்டணி தொடர்வதற்கான அறிகுறிகளே தெரிகின்றன. டெல்லியில் தற்போது ஆம் ஆத்மிக்கு நல்ல மதிப்பு உள்ளது. துணைநிலை ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் அந்தக் கட்சிக்கு சாதகமாக மாறியுள்ளது. இங்கு ஆம் ஆத்மியும் காங்கிரசும் சேர்ந்தால், அது நிச்சயமாக பாஜக-வுக்கே பின்னடைவாக இருக்கும்.

பீகாரில் நிதிஷ்குமார் பாஜக கூட்டணியில் இருந்து கொண்டே, காங்கிரஸ் கூட்டணிக்கு மறைமுக அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறார். ராஷ்ட்ரிய ஜனதாதளத்துடனும் நட்பு பாராட்டத் தொடங்கியுள்ளார். எனவே, இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, 2019 தேர்தலைச் சந்தித்தால் பாஜக வெற்றி வாய்ப்பு மிகக் குறைவே என்று ‘தி பிரிண்ட்’ தனது ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.