சென்னையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற அரசு விழாவில் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அறிவித்தனர். பின்னர் அமித்ஷா - ஈபிஎஸ் - ஓபிஎஸ் இடையே நடந்த பேச்சுவார்த்தையும் பாஜகவுக்கு 40 முதல் 50 தொகுதிகளை அமித்ஷா கேட்டதாக தகவல்கள் வெளியாகின. சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி முடிவான நிலையில், “பழனி சட்டப்பேரவைத் தொகுதியை நிச்சயம் எங்களுக்கு (பாஜக) கொடுக்க வேண்டும். இது எங்களுடைய அன்பான வேண்டுகோள்” என பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று கரூரில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசும்போது, அரவக்குறிச்சியில் பாஜக போட்டியிடும் எனத் தெரிவித்துள்ளார்.  “அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜி நின்றால் அவரை எதிர்த்து பாஜக நேரடியாக போட்டியிடும்” எனத் தெரிவித்தார். பழனி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்க வேண்டும் என்று  நேற்று அன்பாகக் கேட்டுக்கொண்ட அண்ணாமலை, இன்று அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக போட்டியிடும் என்று தெரிவித்துள்ளார்.  அண்ணாமலையின் அடுத்தடுத்த இந்த அறிவிப்பு அதிமுக நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை  ஏற்படுத்தியுள்ளது.