நாமக்கலில் பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கடந்த 45 ஆண்டுகளால நான் தேசிய கட்சியில் இல்லாமல் போய்விட்டேனே என்று வருத்தப்படுகிறேன். நான் திமுகவிலிருந்து பாஜகவுக்கு வந்திருந்தாலும், நான் நானாகவே இருக்கிறேன். நான் பாஜகவுக்கு வந்ததால் திமுகவினர் மத்தியில் எந்தவித எதிர்ப்பும் ஏற்படவில்லை. மாறாக பலரும் வரவேற்கவே செய்கிறார்கள். அதேபோல திமுகவிலிருந்து பாஜகவில் சேர ஏராளமானோர் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.

 
பிரதமர் மோடிக்கு தேர்வு வைக்க வேண்டும் என்று நாம் தமிழர் சீமான் கூறியுள்ளார். அவருக்கு ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். பிரதமர் மோடி ஏற்கனவே தேர்தல் என்ற தேர்வை சந்தித்துதான் இரண்டாவது முறையாக பிரதமர் ஆகியிருக்கிறார். நீட் விவகாரத்தில் நடிகர் சூர்யாவின் கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. மு.க. ஸ்டாலினால் 10 மாதங்கள் ஆனாலும்கூட நீட் தேர்வை நிறுத்த முடியாது. தகுதியான மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கு வர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படிதான் நீட்  தேர்வு நடைபெறுகிறது.


 நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கிய பிறகுதான், அவர் யாருக்கு ஆதரவு அளிப்பார் என்பதை யோசிக்க முடியும். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜகத்தான் போட்டியிட்டது. எனவே இடைத்தேர்தலிலும் மீண்டும் பாஜக போட்டியிடும். தமிழகத்தில் பாஜக மிக வேகமாக வளர்ந்து வருகிற கட்சி ஆகும். எனவே பாஜகவை அனுசரித்து கொண்டு போகும் கட்சிதான் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியும்” என்று வி.பி.துரைசாமி தெரிவித்தார்.