எப்பாடு பட்டாவது தமிழ்நாட்டில் காலூன்றி விட வேண்டும் என தவிக்கும், பிரதமர் மோடிக்கு ஆபத்பாந்தவனாகக் தென்படும் ஒரே நபர் நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே.

அவரை எப்படியாவது வளைத்து பிடித்து, பாரதிய ஜனதாவின் முதல்வர் வேட்பாளராக அறிவித்து தேர்தலை சந்தித்து விட வேண்டும் என்று துடியாய் துடிக்கின்றனர் மோடியும், அமித்ஷாவும்.

படம் ரிலீஸ் ஆகும்போது பரபரப்பாக எதைவாவது பேசிவிட்டு, படம் வெளியானதும் அமைதியை தேடி இமயமலை செல்வது ரஜினியின் வாடிக்கையான ஒன்றாகும்.

ஆனால் கடந்த சில மாதங்களாக, பாஜக வின் தேசிய தலைவர்களும், தமிழக தலைவர்களும், இடைவிடாமல் சந்தித்து மூளை சலவை செய்ததில் அவர் கொஞ்சம் வழிக்கு வந்திருக்கிறார்.

தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலரையும் அவ்வப்போது சந்தித்து, அரசியல் பிரவேசம் குறித்து ஆலோசனை செய்து வருகிறார். இன்னும் ஓரிரு தினங்களிலும் ஆலோசனை செய்ய உள்ளார்.

இதற்கு இடைப்பட்ட நிலையில், ஜெயலலிதா இறந்த சில நாட்களில், தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டதாக அவர் கூறியதன் பின்னணியும் இதுதான் என்று கூறுகின்றனர்.

லிங்கா படத்தில் விழுந்த அடி, கபாலி வெற்றியா? தோல்வியா? என்று விடை கிடைக்காத நிலையில், அவருக்கு அரசியல் ஆசை சற்று அதிகமாகவே துளிர் விட்டுள்ளது.

அவரும் தமது ஆஸ்தான ஜோதிடர் ஒருவரை அழைத்து கேட்டிருக்கிறார். ஆனால் அவர் சாதகமாக எதுவும் சொல்லவில்லையாம்.

ஆனாலும், பாஜக தலைவர்களின் நச்சரிப்பால், அரசியலில் இறங்கித்தான் பார்த்துவிடுவோம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் ரஜனி.

மகர ராசி, திருவோண நட்சத்திரத்தில் பிறந்த அவருக்கு, வரும் டிசம்பர் மாதத்தில் இருந்து ஏழரை சனி ஆரம்பிக்கிறது. அது அவருக்கு சாதகமாக இல்லை என்றே ஜோதிட வட்டாரம் கூறுகிறது.

பணத்தை வாரி இறைக்க பாஜக தயாராக இருக்கிறது. பிரச்சாரத்தில் களமிறங்க ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள். இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்ற நிலையில், அவரும் அரசியலில் இறங்க தயாராகி விட்டார்.

ரஜினிகாந்த் ஓ.கே. சொன்னதும், அடுத்த சில நாட்களிலேயே, ஆட்சி கலைப்பு அல்லது ஆட்சி கவிழ்ப்புக்கு நாள் குறிக்க தயாராக இருக்கிறது பாஜக.

ஜெயலலிதா இல்லை. கருணாநிதி செயலிழந்து விட்டார். இந்த நிலையில் வலுவாக தம்மை எதிர்க்க ஆளே இல்லை என்று ரஜினி கணக்கு போடுகிறார்.

1996 ம் ஆண்டு கிடைத்த அருமையான வாய்ப்பை நழுவவிட்ட ரஜினி, தற்போது அவரது, சினிமா செல்வாக்கும் சரிந்துள்ள சூழலில், அரசியலில் அவர் என்ன சாதிக்க போகிறார் என்கின்றது திரை உலகம்.

ஆனாலும் பாஜக அவரை விடாமல் சுற்றி சுற்றி வந்து நச்சரிப்பதால், அவரும் அரசியலில் குதிக்க முடிவு செய்து விட்டார் என்றே அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.

எனினும், தமிழக மக்களின் அனைத்து உணர்வுகளுக்கும், எதிரான கருத்துக்கள் கொண்டுள்ள பாஜகவின் சார்பில் களமிறங்கும் ரஜினி, மக்கள் மன்றத்தில் அதை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்? என்ற பலமான கேள்வியையும் தவிர்ப்பதற்கில்லை.