bjp trying to get over tamilnadu

தமிழகத்தில் காலூன்ற முடியாமல் தவிக்கும் பாரதிய ஜனதா கட்சி, இங்குள்ள செல்வாக்கு மிக்க கட்சிகளை சிதைத்து சின்னா பின்னமாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

மறுபக்கம், வழக்குகளில் சிக்கியுள்ள முக்கிய தலைவர்களை சசிகலா பாணியில் சிறைக்குள் தள்ளவும் முடிவு செய்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக, சி.பி.ஐ, அமலாக்க பிரிவு போன்றவற்றில், தமிழக அரசியல் தலைவர்கள் மீது, நிலுவையில் உள்ள, மோசடி, லஞ்சம், வரி ஏய்ப்பு உள்ளிட்ட வழக்குகளுக்கு உயிர் கொடுக்கப்பட உள்ளது.

அவ்வாறு, உறங்கும் வழக்குகள் எல்லாம் உயிர் பெற்று எழும்போது, இங்குள்ள பிரதான கட்சிகளின் 20 க்கும் மேற்பட்ட இரண்டாம் கட்ட தலைவர்களும், சசிகலாபோல சிறைக்கு செல்வார்கள். 

கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் வழக்கில் சிறை செல்லும்போது, சரியான தலைமை இல்லாமல், கட்சிகள், பல குழுக்களின் ஆதிக்கத்தால் பிளவு பட்டு பலவீனமாகும்.

ஜெயலலிதா மறைவை அடுத்து, அதிமுகவில் அந்த திட்டம் வெற்றிகரமாக அரங்கேற்றப்பட்டு விட்டது. அதிமுகவும் பன்னீர் அணி, சசிகலா அணி என இரண்டாக பிளவுபட்டு விட்டது.

கூடுதலாக, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும், ஏற்கனவே தனி ஆவர்த்தனத்தை தொடங்கி விட்டார். 

குடியரசு தேர்தல் முடிந்தவுடன், திமுகவில் அந்த திட்டம் அரங்கேற்றப் படும். அதற்காக அழகிரி மற்றும் கனிமொழியிடம் ஏற்கனவே பேச்சு வார்த்தை முடிந்துவிட்டது. 

திமுகவை பலவீனப்படுத்தும் திட்டம், கோவையை மையமாக வைத்து செயல்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே, இன்னும் ஆறேழு மாதங்களில் இந்த கைது மற்றும் கட்சி உடைப்பு பணிகள் அனைத்தும் முடிந்தவுடன், டிசம்பர் மாதத்திற்குள் தமிழகத்தில் தேர்தலை நடத்துவதே பா.ஜ,கவின் திட்டமாக உள்ளது.

தமிழகத்தில் உள்ள பெரிய கட்சிகள் சிதைந்து பல குழுக்களாக பிளவு படும்போது, அவற்றில் சிலவற்றை இணைத்து ஒரு புதிய கட்சியை உருவாக்கி, அதை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள பா.ஜ.க விரும்புகிறது.

எனவே வரும் ஆறேழு மாதங்களில் பெரிய கட்சிகள் பிளவுபடும், வழக்குகளில் சிக்கியுள்ள முக்கிய தலைவர்கள் சிறைக்கு செல்வார்கள். அதன் பிறகு தேர்தல் வரும் என்பதே கட்சி வட்டாரங்களின் தகவல்.