அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலைக் கணக்கில் கொண்டு தேர்தல் வியூகம் அமைப்பதற்காக இன்று சென்னை வரும் பாஜக தலைவர் அமித்ஷா, தமிழகத்தில் எப்படியாவது 10 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் கதன கட்சிக்காரர்களை முடுக்கிவிட்டுள்ளார்.இது தொடர்பாக கட்சி நிர்வாகிகள் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார்.

பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா இன்று சென்னை வருகிறார். கட்சி நிர்வாகிகள் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தைப் பொறுத்தவரை எப்படியாவது காலூன்றி விட வேண்டும் என அக்கட்சி தலைகீழாக நின்று பார்க்கிறது.

இதற்காக இபிஎஸ், ஓபிஎஸ் இருவரையும் வளைத்துப் போட்டு அதற்கான முயற்சிகளை பாஜக மேற்கொண்டு வருகிறது

இந்நிலையில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கியுள்ள அமித்ஷா, பல்வேறு மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டு கட்சியினரை சந்தித்து வருகிறார்.

அதன் ஒருபகுதியாக, இன்று தமிழகம் வரும் அவர், பாஜக நிர்வாகிகளையும், தேர்தல் பொறுப்பாளர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார். தேர்தல் வியூகம், கட்சியினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள், பிற கட்சிகளுடன் கூட்டணி வாய்ப்பு ஆகியவை தொடர்பாக, அமித்ஷா கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். 

பா.ஜ.க.வை பொறுத்தவரையில், தமிழகத்தில் 5 வாக்குச்சாவடிகளுக்கு ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை கண்காணிப்பதற்கு 25 தனி பொறுப்பாளர்கள் தனியாக நியமிக்கப்பட்டு உள்ளனர். ஏறக்குறைய 2,750 பேர் மகா சக்தி கேந்திரா பொறுப்பாளர்களாகவும், 13,056 பேர் சக்தி கேந்திரா பொறுப்பாளர்களாகவும் ஏற்கனவே பணியாற்றி கொண்டிருக்கிறார்கள். இவர்களை வைத்து தேர்தலை சந்திக்கவும் அமித்ஷா திட்டமிட்டுள்ளார்

இதில் முக்கியமாக கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, மதுரை உள்ளிட்ட 10 தொகுதிகளை அமித்ஷா தேர்வு செய்திருப்பதாகவும், இந்த 10 தொகுதிகளிலும் கட்டாயமாக வெற்றி பெறும் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றும் தொண்டர்களை அவர் முடுக்கிவிட்டுள்ளார்.இன்னும் சற்று நேரத்தில்  சென்னை வரும் அமித்ஷாவிற்கு, பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. ஏற்கனவே இரண்டு முறை அமித்ஷாவின் தமிழக பயணம் திட்டமிடப்பட்டு, பின்னர் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், அவரது இன்றைய ஒருநாள் சுற்றுப்பயணம் தமிழக அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.