தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கற்களில், ஊர் பெயர்கள் இந்தி மொழியில் எழுதப்பட்டு வருகின்றன.

அதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மீண்டும் ஒரு முறை தார் சட்டியை தூக்க வேண்டுமா? என்றும் தி.க. வீரமணி  கேள்வி எழுப்பி இருந்தார்.

2004 ம் ஆண்டு மத்திய அமைச்சராக இருந்த திமுகவின் டி.ஆர்.பாலு கையெழுத்திட்டதன் அடிப்படையிலேயே, நெடுஞ்சாலை மைல் கற்களில் ஊர் பெயர்கள் இந்தியில் எழுதப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் பொன்னார் கூறி இருந்தார்.

தற்போது, பாஜக வை சேர்ந்த வானதி சீனிவாசனும், இந்தி மொழிக்கு பரிந்து பேசி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

நெடுஞ்சாலை மைல் கற்களில் இந்தியில் எழுதப்படுவதால், தமிழே அழிந்து விடுவதாக குரல் கொடுப்பது, சரியில்லை என்று வானதி  கூறி உள்ளார்.

மேலும், இந்தி தெரிந்தவர் என்ற ஒரே காரணத்திற்காகவே, மாறனை கருணாநிதி டெல்லி அனுப்பினார் என்றும் அவர் கூறினார்.

ராமதாஸ், திருமாவளவன் போன்றவர்களும், அரசியலுக்காகவே இந்தி எதிர்ப்பை கையில் எடுத்துள்ளனர் என்றும், அதன்மூலம் இளைஞர்களை கவர முடியாது என்றும் தெரிவித்தார். 

இந்தி எதிர்ப்பு என்பதே காலாவதியான கொள்கை. இன்னமும் அதைப் பிடித்துக்கொண்டு திமுக தொங்கிக்கொண்டு இருக்கிறது.

இந்தி கற்காததால் இரண்டு தலைமுறையினருக்கு வேலைவாய்ப்பு பறி போனது. தமிழகத்தைத் தாண்டி இவர்களால் எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை என்றெல்லாம் கூறி உள்ளார் வானதி.

தமிழ் நாட்டில், சாதாரண கட்டுமான தொழிலாளர் தொடங்கி, ஹோட்டல்கள், சலூன் கடைகள் என அனைத்திலும் பணியாளர்களாக இருக்கும் பெரும்பாலானோர் இந்தி தெரிந்த வட மாநிலத்தை சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர்.

இந்தியை தாய்மொழியாகக் கொண்டும், சரளமாக பேச தெரிந்தும், அதை பேசுவதற்கே வாய்ப்பில்லாத தமிழத்திற்கு வேலை தேடி வந்துள்ளனர் அவர்கள்.

இது தமிழர்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் வானதி சீனிவாசனுக்கு மட்டும் அது தெரியாமல் போய்விட்டது. 

அதனால்தான், இந்தி எதிர்ப்பு என்பது காலாவதியான கொள்கை என்று அவர் குறிப்பிடுகிறார் போலும்.