இந்தியாவின் துணைப் பிரதமராக மு.க.ஸ்டாலின் திட்டம்..! திமுக அரசை கலாய்க்கும் அண்ணாமலை
திமுக அரசு பதவியேற்று ஒரே ஆண்டில் மக்களிடம் சலிப்பு தட்டி விட்டதாகவும், எப்போது பெட்டியை கட்டிக்கொண்டு திமுக வீட்டிற்கு செல்லும் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திமுக- பாஜக மோதல்
திமுக அரசு பதவியேற்று ஒரு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், திமுக- பாஜக இடையே நாள் தோறும் கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது. திமுகவை பாஜக விமர்சிப்பதும் இதற்க்கு திமுக பதிலடி கொடுப்பதும் நிகழ்ந்து வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணத்தில் முறைகேடு, மின் வாரியத்தில் பிஜிஆர் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்குவதில் டெண்டரில் மோசடி என தொடர் குற்றச்சாட்டு காரணமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது திமுக மற்றும் அமைச்சர்கள் 620 கோடி ரூபாய் அளவிற்கு மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்தநிலையிலை மத்தியில் பாஜக அரசு பதவியேற்று 8 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாஜக சார்பாக 8 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. பொள்ளாட்சியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
துணைப் பிரதமராக ஸ்டாலின் திட்டம்
இந்தநிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, மத்திய அரசு 8 ஆண்டுகளில் மக்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாக கூறினார். மத்திய அரசு திட்டங்களை மாநில அரசு தனது திட்டம் என யார் பெற்ற பிள்ளைக்கோ தன் பெயரை வைப்பதாக விமர்சித்தார். 8 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இதுவரை ஒரு குற்றச்சாட்டு கூட மத்திய அரசு மீது கூற முடியாது என தெரிவித்தவர் ஒரு குண்டூசி திருடிவிட்டதாக கூட புகார் இல்லையென தெரிவித்தார். ஆனால் காங்கிரஸின் 10 ஆண்டு கால ஆட்சியில் ஆட்டை கூறு போடுவது போல் நாட்டை காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கூறு போட்டதாக தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் துணைப்பிரதமர் ஆக மு.க. ஸ்டாலின் முயற்சிப்பதாக தெரிவித்தார். இப்போதும் நாட்டை கூறு போட மம்தா பானர்ஜி, கே.சி.ஆர். மு.க.ஸ்டாலின் முயற்சிப்பதாக குறிப்பிட்டார். மத்தியில் ஆட்சியை பிடிக்க எதிர்க்கட்சிகள் கடந்த ஒரு வருடமாக முயற்சித்து கொண்டு இருப்பதாகவும் கூறினார். திமுக அரசு பதவியேற்று ஒரு வருடங்களை நிறைவடைந்த நிலையில் மக்களுக்கு சலிப்பு தட்டி விட்டதாகவும் எப்போது பெட்டியை கட்டிக்கொண்டு திமுக செல்லும் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டதாக கூறினார். ஆனால் பாஜக அரசு பதவியேற்று 8 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் மக்களுக்கு எந்த வித குறையும் இல்லையென தெரிவித்தார்.
சட்டம் ஒழுங்கு மோசம்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக தெரிவித்தவர், ஆட்டை கம்பை கொண்டு கட்டி தூக்குவது போல் காவல்துறையை இரண்டு பேர் தூக்கி செல்வதாகவும், ஒருவர் திமுக மாவட்ட செயலாளர் மற்றொருவர் திமுக ஒன்றிய செயலாளர் என விமர்சித்தார். பெண்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாக தெரிவித்தவர். அடுத்த அறிவிப்பில் பெண்களுக்கு ஒரு பாடி கார்டு என்ற திட்டத்தை தமிழக அரசு அறிவித்தாலும் அறிவிக்கும் என விமர்சித்தார். தமிழகம் பார்க்காத குற்றங்களில் திமுகவினர் ஈடுபட்டு வருவதாகவும் குற்றங்களில் திமுக பி.எச்.டி படிப்பதாக விமர்சித்தார்.
இதையும் படியுங்கள்
பெண்கள் அச்சமின்றி நடமாடனும்.. அது தான் நல்லாட்சி.. ஆனால் தமிழ்நாட்டில்? என்ன சொல்கிறார் அன்புமணி..!