அதிமுக பாஜக இடையே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இடப் பங்கீடு விவகாரத்தில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில் பாஜக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக பாஜக இடையே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இடப் பங்கீடு விவகாரத்தில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில் பாஜக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் அதிமுக- பாஜக கூட்டணி முடிவுக்கு வரவுள்ளது. செல்வி ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவுக்கும்-பாஜகவுக்கும் இடையே கூட்டணி ஏற்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சில நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலை கடந்து இந்த கூட்டணி நீடித்து வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் மொத்தம் 12 ஆயிரத்து 858 பணியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி பேரம் பரபரப்பாக நடந்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் அதிமுக- திமுக கூட்டணிகளுக்கு இடையே நேரடி போட்டி உள்ள நிலையில், பாமக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிட உள்ளன. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் அதிமுக எம்எல்ஏக்களின் சட்டமன்ற செயல்பாடுகள் குறித்து கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து பேசியது கூட்டணி முறிவுக்கு காரணமாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. நயினாரின் அந்த பேச்சு அதிமுக அடிமட்ட தொண்டன் முதல் உச்சபட்ச நிர்வாகிகள் வரை கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பாஜகவை கூட்டணியில் இருந்து கழற்றி விட வேண்டும் என்றும், எதிர் வரும் தேர்தலில் அதிமுக தனித்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்றும் கட்சி நிர்வாகிகள் கடந்த வாரமே முடிவு செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனாலும் இரு கட்சிகளுக்கும் இடையேயான இடப் பகிர்வு தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. அந்தவகையில் இன்று காலை 3 மணி நேரத்துக்கும் மேலாக அதிமுக தலைமை அலுவலகத்தில் 3வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதிலும் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை. அதாவது கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில் வருவாய் மாவட்ட வாரியாக தங்களுக்கு சாதகமாக உள்ள இடங்களின் பட்டியலை அதிமுகவிடம் பாஜக நிர்வாகிகள் அளித்துள்ளனர். ஆனால் அதைப் படித்துப் பார்த்த அதிமுக நிர்வாகிகள் அதில் குறைந்த அளவிலான இடங்களையே தர ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் முதல் இரண்டு சுற்று கூட்டத்தில், பாஜகதான் அதிமுகவை நம்பி இருக்கிறதே தவிர அதிமுக ஒன்றும் பாஜகவை நம்பி இல்லை என்பது போன்ற தோரணையில் அதிமுக நிர்வாகிகளின் பேச்சுக்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
அதாவது முதல்நாள் பேச்சுவார்த்தையில் 50% வார்டுகளையும், 5 மேயர் பதவிகளையும் பாஜக கேட்டதாகவும், ஆனால் 5 சதவீத இடங்களை மட்டுமே கொடுக்க முடியும் என அதிமுக தரப்பில் கூறியதாகவும் தெரிகிறது. அதே நேரத்தில் பாஜக தரப்பில் இருந்து வேலூர், நெல்லை, கோவை ஆகிய மாநகராட்சி பதவிகளை எதிர் பார்த்ததாகவும், ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என அதிமுக மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதே போல் 100 வார்டுகள் உள்ள கோவை மாநகராட்சியின் 30 வார்டுகளை பாஜக கேட்டதாகவும், ஆனால் அதில் 5 வார்டுகள் மட்டுமே அதிமுக வழங்க முன்வந்ததாகவும் தெரிகிறது. முதலில் 50% இடங்களை கேட்ட பாஜக கடைசியாக 15% இடங்களுக்கு இறங்கி வந்ததாகவும், ஆனால் மொத்தத்தில் வெறும் 5% மட்டுமே தரப்படும் என்றும் அதிமுக தரப்பில் திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் அதிமுகவின் நடவடிக்கைகளால் பாஜக கடும் அதிர்ச்சி அடைந்தது என்றும் தெரிகிறது.

இந்நிலையில்தான் அதிமுக முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிரடியாக வெளியிட்டுள்ளது. இடப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே அதிமுகவின் இந்த செயலால் பாஜக கடும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளது. இதே நேரத்தில் கொடுக்கும் இடங்களை ஏற்றுக்கொண்டால் இணைந்து போட்டியிடலாம் இல்லையென்றால் தனித்துப் போட்டியிட அதிமுக தயாராக இருக்கிறது என்றும் ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பில் இருந்தே செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அதிமுகவின் இந்த முடிவை பாஜக கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என்றும் அதனால் குழம்பிக் கொண்டிருந்த நிலையில்த்தான், கடலூர், விழுப்புரம் மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களுக்குட்பட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் பதவிக்கான வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக அறிவித்துள்ளது. இது முதற் கட்ட வேட்பாளர் பட்டியல் தான் இன்னும் காலதாமதம் செய்தால் அடுத்தடுத்த பட்டியல்கள் வெளியாகும் என பாஜகவுக்கு அதிமுக சொல்லாமல் சொல்லியுள்ளது.

நயினார் நாகேந்திரன் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை இழிவாக பேசியதுதான், இனி என்ன நடந்தாலும் சரி தனித்துப் போட்டியிடுவது என அதிமுக முடிவு செய்ய காரணம் என்றும் கூறப்படுகிறது. அதனால் தான் எந்த நேர்காணலும் இன்றி மாவட்ட செயலாளர்கள் அனுப்பிய பட்டியலை வைத்து தர்மபுரி, திட்டக்குடி, சிதம்பரம், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விழுப்புரம், விருத்தாச்சலம், கடலூர், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளின் வார்டு வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக அதிரடியாக வெளியிட்டதாக கூறப்படுகிறது. அதிமுகவின் இந்த நடவடிக்கையால் ஆடிப்போன பாஜக நகராட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது குறித்து ஆலோசனை ஈடுபட்டுவருகிறது. இன்று மாலைக்குள் பாஜகவும் 100 பேர் கொண்ட முதற் கட்ட பட்டியலை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் சற்று நேரத்தில் அண்ணாமலை அதற்கான பட்டியலில் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக தமிழகத்தில் காலூன்றி விட்டது, தனித்துப் போட்டியிட்டாலும் அதிக இடங்களை வெல்லும் அளவுக்கு வளர்ந்துவிட்டது என பாஜகவினர் பேசி வந்த நிலையில் தற்போது அதிமுக பாஜகவை கூட்டணியில் இருந்து கழட்டி விட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
