அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது என மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்.பியுமான தம்பிதுரை கூறியுள்ளார்.

பாஜகவுக்கு எதிரான கருத்துக்களை கூறி அதிமுகவினரையே கலங்கடித்து வருகிறார் தம்பிதுரை. பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அவர் சமீபத்தில் தெரிவித்த கருத்து பாஜக- அதிமுக இடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுத்த பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ‘அ.தி.மு.க, பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை எனக் கூற தம்பித்துரைக்கு உரிமை இல்லை’ எனத் தெரிவித்து இருந்தார்.

இதனைத் தொடர்ந்து ’பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அக்கட்சியின் தலைவர் தமிழிசை ஆகியோர் பல்வேறு கருத்துகளைக் கூறலாம். அதேபோல் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களும் பல்வேறு கருத்துகளைக் கூறலாம். ஆனால், இந்தக் கருத்துகள் எங்களுக்கிடையே உள்ள நல்லுறவு பாதிக்கும் கருத்துகள் அல்ல. தமிழகத்தின் உரிமைகளை மீட்பதற்குத் தொடர்ந்து போராடி வருகிறோம்’’ என இந்த மோதல் குறித்து கருத்து தெரிவித்து நழுவி வருகிறார்கள் அதிமுக அமைச்சர்கள். 

இந்நிலையில், மீண்டும் பாஜகவுக்கு எதிராக வாலிபிடித்து இருக்கிறார் தம்பிதுரை. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக தலைவர்கள் தமிழக அரசை விமர்சிக்கும்போது வாயை மூடி மௌனமாக இருக்க முடியாது.  எங்கள் கட்சி குறித்து கருத்து சொல்ல தமிழிசைக்கு யார் உரிமை கொடுத்தது? யார் குறை சொன்னாலும் என்னால் சும்மா இருக்க முடியாது’’ என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.