அரசாங்கத்திற்கு ஒத்துழைக்க வேண்டியது பாஜகவின் கடமை என அதிமுக அமைச்சர் பாண்டியராஜன் வேல் யாத்திரை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
 
தமிழகத்தில் நவம்பர் 6 தொடங்கி டிசம்பர் 6 வரை பாஜகவின் வேல் யாத்திரை நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் தடையை மீறி கடந்த வெள்ளிக்கிழமை திருத்தணியில் யாத்திரை தொடங்கிய பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜகவினரை போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

  
 
இந்நிலையில் எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் வேல் யாத்திரை நடத்தியே தீருவோம் என பாஜக தமிழக தலைவர் எல்,முருகன் கூறியுள்ளார். இதனை விமர்சித்து அதிமுக அமைச்சர் பாண்டியராஜன் பேசியுள்ளார்.’’அரசாங்கத்திற்கு ஒத்துழைக்க வேண்டியது பாஜகவின் கடமை. அவர்கள் தற்போது செய்து வரும் செயல் மக்களிடம் நல்ல முறையில் போய் சேருகிறதா? என்பதை அவர்கள் பார்க்க வேண்டும். அவர்களின் அரசியல் ரீதியான நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஆதரவும் கிடையாது. எதிர்ப்பும் கிடையாது.
 
பாஜக தற்போது மேற்கொண்டு வரும் செயல்கள் மக்கள் நலனுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய செயல்கள் என்ற எண்ணம் மக்களுக்கு வந்துவிடக்கூடாது. 100 பேருக்கு மேல் ஒன்று கூடினால் கைது செய்ய வேண்டும் என்பது தற்போது கொரோனா காலத்தில் உள்ள ஊரடங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை. அதைத்தான் வேல் யாத்திரை விவகாரத்தில் தற்போது நாங்கள் செய்து வருகிறோம்’’என அவர் தெரிவித்துள்ளார்.