குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் சட்டத்திருத்தங்களுக்கு எதிராக  பிரச்சார இயக்கம் தொடங்க உள்ளதாக எஸ்.டி.பி.ஐ. கட்சி அறிவித்துள்ளது. அக்கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் கொரோனா ஊரடங்கு காரணமாக இணையதளம் வாயிலாக நடைபெற்றது. அதில் தற்போதைய அரசியல் சுழலை மையமாக வைத்து முக்கிய தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:- குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் சட்டத்திருத்தங்களுக்கு எதிராக ஆக.25 முதல் 31வரை பிரச்சார இயக்கம் நடைபெறும், அதாவது கொரோனா தொற்றால் நாடே முடங்கியிருக்கும் காலக்கட்டத்தில், எவரும் எதிர்த்து களமாடாத சூழலைப் பயன்படுத்தி, புறவாசல் வழியாக குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் சட்டத்திருத்தங்கள் மற்றும் கொள்கைகளை நடைமுடைப்படுத்த மத்திய பாஜக அரசு வேகங்காட்டி வருகின்றது. 

கல்வியின் அறநெறியை தகர்த்து, கல்வியில் சமூக நீதிக்கான இடஒதுக்கீடு முறையை ஒழித்து, கல்வியை எட்டாக்கனியாக்கும் வகையில் நவீன குலக் கல்வி முறையை போதிக்கும் புதிய கல்விக் கொள்கையை பல்வேறு எதிர்ப்புகளை புறக்கணித்து மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளது.  அதேபோல் கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக நாட்டின் இயற்கை வளங்களை அழித்து, சுற்றுச்சூழல் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு திருத்த வரைவை (EIA-2020) பாஜக அரசு முன்மொழிந்துள்ளது.  மேலும், மனித உரிமைகளை ஒழித்து, அரச பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில், குற்றவியல் சட்டங்களில் அவசரகதியில் மாற்றங்களை கொண்டுவர மத்திய அரசு 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.  கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி இதுபோன்ற சட்டத்திருத்தங்களை கொண்டுவருவதை மத்திய பாஜக அரசு கைவிட வலியுறுத்தி, தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும், ஆகஸ்ட் 25 முதல் ஆகஸ்ட் 31 வரை துண்டறிக்கை, போஸ்டர் பிரச்சாரங்கள், சமூக வலைதள பிரச்சாரங்கள் மேற்கொள்ளவும் மாநில செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

மேலும், தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் தொடர்ந்து துரோகமிழைத்து வருவதோடு, அறுதிப் பெரும்பான்மை மமதையில் மக்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டுபரும் பாஜகவை தமிழக மக்களும், தமிழக அரசியல் கட்சிகளும் புறக்கணித்து தனிமைப்படுத்த வேண்டும். தமிழகத்தின் பல்வேறு உரிமைகள் பறிக்கப்படுவதற்கு காரணமான பாஜக அடுத்த சட்டமன்றத்தில் இடம்பெறும் என்று பாஜக மாநில தலைவர் தெரிவித்துள்ளார். ஆனால், தமிழர்கள் மிகத்தெளிவாகவே உள்ளனர். அவர்கள் கடந்தகாலங்களைப் போலவே தோல்விகளை மட்டுமே பாஜகவுக்கும் அதன் கூட்டணிக்கும் அளிப்பார்கள்.  ஏற்கனவே செய்த தவறை அதிமுக மீண்டும் செய்யக்கூடாது. ஆகவே, எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவை தமிழக அரசியல் கட்சிகள் புறக்கணிப்பதோடு தனிமைப்படுத்த வேண்டும் எனவும் இச்செயற்குழு வலியுறுத்துகிறது. என அதில் கூறப்பட்டுள்ளது.