தமிழகத்தில் அதிமுக கூட்டணி மோசமான தோல்வியைத் தழுவியுள்ள நிலையில், மாநிலங்களவை தேர்தலில் தமிழகத்திலிருந்து பாஜகவுக்கு ஓரிடத்தை கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக 5 இடங்களில் போட்டியிட்டது. போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் பாஜக தோல்வியைச் சந்திள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கோவை, கன்னியாகுமரி தொகுதியிலும் பாஜக தோல்வியடைந்திருப்பது அக்கட்சி தொண்டர்களுக்கு மட்டுமல்ல, கட்சி மேலிடத்துக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


இந்நிலையில் மே 30 அன்று மோடி பிரதமராகப் பதவியேற்கும்போது தமிழகத்திலிருந்து யார் அமைச்சர் ஆவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தமிழக பாஜக சீனியரான இல.கணேசன் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். எனவே அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், புதியவர்களுக்கு வழிவிடும் போக்கு பாஜகவில் அதிகரித்திருப்பதால், அவருக்கு பதவி கிடைக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் பாஜகவைச் சேர்ந்த வேறு யாருக்காவது அமைச்சர் பதவி வழங்க வேண்டுமென்றால், அவரை மாநிலங்களவை உறுப்பினராக்க வேண்டும். வரும் ஜூலை மாதம் தமிழகத்தில் 6 மாநிலங்களவை  இடங்கள் காலியாகி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு தலா 3 இடங்கள் கிடைக்கும். அதில் ஓரிடத்தை பாஜகவுக்கு வழங்கும்படி அதிமுகவிடம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக டெல்லியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பாஜக பேசியதாகக் கூறப்படுகிறது.


 இதனால், அதிமுக தர்மசங்கடத்துக்கு ஆளாகியுள்ளதாகவும் தெரிகிறது. ஏற்கனவே 3 இடங்களில் ஓரிடத்தை வழங்க தேர்தலுக்கு முன்பே அதிமுக பாமகவுடன் உடன்பாடு கண்டிருந்தது. எனவே இரு இடங்கள் மட்டுமே உள்ள நிலையில், பாஜகவுக்கு மாநிலங்களவை பதவியை அதிமுக தருவதில் பெரும் தயக்கம் ஏற்படும். அக்கட்சி தலைவர்கள் பலரும் அந்தப் பதவியை எதிர்பார்ப்பார்கள் என்பதால், பாஜகவுக்கு ஓரிடத்தை வழங்க அதிமுக தயங்கும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த விஷயத்தில் மோடி பதவியேற்கும் முன்பாக தெளிவு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.