தமிழக பாஜக பொதுச்செயலாளர் சீனிவாசன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “வரும் 21ம் தேதி உள்துறை அமைச்சரும் முன்னாள் தேசிய தலைவருமான அமித்ஷா சென்னை வருகிறார். தமிழகத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகளை அவர் சந்திக்கிறார். அமித்ஷா எந்த மாநிலத்துக்கு சென்றாலும் அங்கே பாஜவுக்கு வெற்றிதான். அவருடைய வருகைக்கு பிறகு தமிழக தேர்தல் களம் நிச்சயம் மாறி களம் சூடு பிடிக்கும். திமுகவுக்கு மேலும் பயம் அதிகரிக்கும்.


திமுகவுக்கு பிரதமர் மோடி போபியா வந்துவிட்டது. அதனால்தான் எதற்கெடுத்தாலும் மோடி, மத்திய அரசு காரணம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறது திமுக. திமுக என்பது அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலினின் குடும்ப கட்சியாகி விட்டது. மு.க. அழகிரி, கனிமொழிக்குகூட அதில் இடமில்லை. உண்மையில் மு.க. ஸ்டாலினைவிட மு.க. அழகிரி அரசியல் சமார்த்தியம் நிறைந்தவர். மு.க. அழகிரி கட்சி தொடங்கினால் பாஜக அதை வரவேற்கும்” என்று சீனிவாசன் தெரிவித்தார்.