கல்வியைக் காவிமயமாக்கும் பாஜக அரசின் சதிச்செயலுக்கு அதிமுக அரசு பலியாகிவிட்டது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

 

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘’ஈராயிரம் ஆண்டுக்கு முன்பே அறம்பாடிய உலகப்பொதுமறை திருக்குறள் எனும் மானுடச் சாசனம் இருக்க, பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் பகவத் கீதையைச் சேர்ப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது. அண்ணா பல்கலைக்கழக இரண்டாமாண்டு பொறியியல் படிப்பில் தத்துவவியல் பாடத்திட்டத்தில் பகவத்கீதை இடம்பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. கல்வியைக் காவிமயமாக்கும் பாஜக அரசின் சதிச்செயலுக்கு அதிமுக அரசு பலியாகிவிட்டது என்பதையே இது காட்டுகிறது.

பன்னாட்டுச் சமூகமும், ஐ.நா. பெருமன்றமும் இனியாவது ஈழ நிலத்தில் நிகழ்ந்த இனப்படுகொலைக்கு ஒரு சுதந்திரமான எவரது தலையீடுமற்றப் பன்னாட்டு விசாரணையை நடத்தி, ஈழ மக்களிடையே ஒரு பொது வாக்கெடுப்பை நடத்த முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்’’ என அவர் தெரிவித்துள்ளார்.