மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அதிமுக-பிஜேபி-பாமக மூன்று கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளது. அதிமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்த பாமக அதிமுகவோடு கூட்டணி அமைத்துள்ளது விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

நேற்று ஆம்பூரில் பேசிய  ஸ்டாலின், ஏற்கெனவே இது போன்று அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்து தோற்றுவிட்டனர். ராமதாஸ் அதிமுகவின் கதை என புத்தகம் போட்டு அதிமுகவை கடுமையாக விமர்சித்தவர். அவர் தற்போது அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைத்திருப்பது வெட்கக்கேடான செயல் என கடுமையாக சாடியிருந்தார்.

இந்நிலையில் ஸ்டாலின் பேச்சு குறித்து பொன்.ராதாகிருஷ்ணன், ”ஸ்டாலின் அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். சாக்கடை எங்கு ஓடுகின்றது என்று சந்தேகம் ஏற்படக்கூடிய வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.  திருச்சியில் செய்தியாளர்கள்  சந்திப்பில் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன்,

அதிமுகவை பிஜேபி பல முறை விமர்சித்திருக்கிறது, தற்போது எதை மையப்படுத்தி பிஜேபி-அதிமுக பிரச்சாரம் மேற்கொள்ளும் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், பிரதமர் மோடியின் திட்டங்கள் உலக அரங்கில் இந்தியாவை முதல் நிலைக்குக் கொண்டு வருவதாக உள்ளது. மதம், சாதி வேறுபாடுகளைக் கடந்து கைகோக்க வேண்டிய சூழ்நிலை இனிவரும் 5 ஆண்டுகளுக்கு நிகழவிருக்கிறது. அதற்கு இந்தியர்கள் ஒவ்வொருவரும் ஒன்றுபட வேண்டும். அதுபோன்று அரசியல் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும். என்றார்.

திருச்சியில் பிஜேபி போட்டியிடுமா என்ற கேள்விக்கு, “40 தொகுதிகளிலும் கூட்டணி சார்பாக யார் போட்டியிட்டாலும் அவர்கள் பாஜக வேட்பாளர்களாகவே கருதப்படுவர் என்று கூறினார். தேமுதிக பாஜக கூட்டணி இழுபறி குறித்த கேள்விக்கு, இதுதொடர்பாக விவரங்கள் கிடைத்த பிறகு சொல்வதாக குறிப்பிட்டார். அதிமுக பாமகவை ஊழலுக்கு அப்பாற்பட்ட கட்சியாக பிஜேபி பார்க்கிறதா என்ற கேள்விக்கு, நாட்டு நலனை விரும்புவர்கள் பிஜேபி பக்கத்தில் இருப்பதாக தெரிவித்தார்.