தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பழைய கட்சிகளில் திமுக, அதிமுகவுக்கு அடுத்தப்படியாக காங்கிரஸ் கட்சிதான் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.. எப்படி? 

தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு அடுத்தப்படியாக நாங்கள்தான் மூன்றாவது பெரிய கட்சி என்று பல கட்சிகளும் கம்பு சுழற்றும். ஆனால், தமிழகத்தில் திமுக, அதிமுக அடுத்தப்படியாக காங்கிரஸ்தான் மூன்றாவது பெரிய கட்சி என்று கதர்ச்சட்டைகள் ஆறுதலடைந்துகொள்ளலாம். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் பெரும்பாலான கட்சிகளை ஒற்றை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்கி தேர்தலில் நிறுத்தியுள்ளது திமுக. ஆனால், காங்கிரஸ் மட்டும் ‘பழைய நினைப்புடா பேராண்டி..’ என்ற நினைப்பில் வழக்கம்போல் 40 தொகுதிகளுக்கு மேல் எதிர்பார்த்தது.
ஆனால், திமுக 15 தொகுதிகளிலிருந்து பேச்சுவார்த்தையைத் தொடங்க காங்கிரஸ் கட்சி கடும் அப்செட். பிறகு கெஞ்சி, கூத்தாடி, கண்ணீர் விட்டு என எல்லா உத்திகளையும் கையாண்டு ஒரு வழியாக 25 தொகுதிகளை திமுகவிடமிருண்டு காங்கிரஸ் பெற்றுவிட்டது. இந்தக் குறைந்த தொகுதிகளைப் பெற்றுக்கொண்டது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் வருத்தம்தான். ஆனால், இதிலொரு மகிழ்ச்சியும் அந்தக் கட்சிக்கு கிடைத்துள்ளது. அது என்ன என்றுதானே கேட்கிறீர்கள்.
அதிமுக கூட்டணியில் பாமக 23, பாஜக 20 ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகின்றன. அந்தக் கூட்டணியில் தேமுதிகவுக்கும் 20 தொகுதிகளுக்கு கீழே தான் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும். திமுக கூட்டணியில் காங்கிரஸைத் தவிர்த்து எல்லா கட்சிகளுமே ஒற்றை இலக்கத் தொகுதிகளில்தான் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சி மட்டும்தான் திமுகவில் 25 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணிகளில் திமுக, அதிமுகவுக்கு அடுத்தப்படியாக அதிக தொகுதி போட்டியிடுவது காங்கிரஸ் மட்டும்தான்.
இதை நினைத்து காங்கிரஸ் கட்சிக்கு உள்ளூர கொஞ்சம் மகிழ்ச்சிதான். அதிலும் பாஜகவைவிட கூடுதலாகப் போட்டியிடுவதால் கதர்ச்சட்டைகளுக்கு கூடுதல் ஹேப்பிதான். இதனால், கதர்ச்சட்டைகள் ஆறுதல் கொள்ளலாம். பின்னே, 2006-இல் 45, 2011-இல் 63, 2016-இல் 41 என தொடர்ந்து திமுக, அதிமுகவுக்கு அடுத்தப்படியாக அதிக தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, அதைத் தக்கவைத்துக்கொண்டதே பெரிய சாதனைதானே..!