Asianet News TamilAsianet News Tamil

அரசியல் அனாதையாகிறதா அதிமுக? பாமகவைத் தொடர்ந்து கூட்டணியை முறிக்கும் பாஜக..?

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததுமே கூட்டணியிலிருந்து வெளியேறுவது பற்றி பாஜக தலைவர்கள் வெளிப்படையாக கருத்துக் கூறினர்.  பின்னர் 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் கள்ளக்குறிச்சியில் அதிமுகவை எதிர்த்து பாஜகவினர் களமிறங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. தற்போது நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடும் நோக்கில் தான் நாளை முதல் விருப்ப மனுக்கள் பெறும் அறிவிப்பு வெளியாகியுள்ளதாக பேசப்படுகிறது.

BJP plans to contest Rural local body polls alone
Author
Chennai, First Published Nov 6, 2021, 5:00 PM IST

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் விதமாக, தங்கள் கட்சியில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து நாளை முதல் விருப்ப மனுக்களை பெற உள்ளது பாரதிய ஜனதா கட்சி. தேர்தல்களுக்கு முன் அனைத்து கட்சிகளும் செய்யும் வழக்கமான நடைமுறை தா இது என்றாலும், பாரதிய ஜனதா கட்சித் தலைமையிடமான கமலாலயத்திலிருந்து வரும் தகவல் வேறு விதமாக உள்ளது.

BJP plans to contest Rural local body polls alone

சட்டசபை தேர்தல் சமயத்தில், அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலும், அவர்கள் கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை என்ற மனக்கசப்பு இருந்தது. தாங்கள் கேட்ட தொகுதிகளை தராமல் தோல்வி முகம் உள்ள தொகுதிகளை தங்கள் தலையில் கட்டியதாக தொண்டர்கள் முனுமுனுத்தனர். பின்னர் தேர்தல் தோல்விக்கும் பாஜக மீது பழி போட்டனர் அதிமுகவினர். இந்த பிளவு உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் அதிகரித்தது. குறிப்பாக முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகு, “பாஜக தனித்தே நின்றிருக்கலாம்” என்று பேட்டி கொடுத்தார் மூத்த தலைவரான பொன்.ராதாகிருஷ்ணன். பின்னர் 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் கள்ளக்குறிச்சியில் அதிமுகவை எதிர்த்து பாஜகவினர் களமிறங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.

BJP plans to contest Rural local body polls alone

ஒன்றிய கவுன்சிலர், வார்டு உறுப்பினர், ஊராட்சித் தலைவர் ஆகிய பதவிகளுக்கு பாஜகவினர் 381 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இது அக்கட்சித் தலைமையை தனித்து போட்டியிடுவது பற்றி சிந்திக்கவைத்துள்ளது. மேலும், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை திமுக அரசு மீது சுமத்திவரும் ஊழல் குற்றச்சாட்டுகள், முன்னெடுத்து வரும் போராட்டங்கள், வார இறுதி நாட்களில் கோவில்கள் மூடப்பட்ட விவகாரம், டாஸ்மாக் கடைகள் திறப்பு உள்ளீட்ட பல பிரச்சனைகளில் முன்னெடுத்த போராட்டங்களால் மக்கள் மத்தியில் பாஜகவின் செல்வாக்கு வளர்ந்திருப்பதாக கட்சித் தலைமை கருதுகிறது. மேலும் எதிர்கட்சியான அதிமுகவை விட அரசியல் களத்தில் திமுக எதிர்ப்பு அரசியலை அதிகமாக முன்னெடுப்பது பாஜக தான் என்று மக்கள் பேசத்தொடங்கிவிட்டனர்.

ஆக, நடக்க இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுவது கட்சியின் வளர்ச்சிக்கு நல்லது என்று தொண்டர்கள் கருதுவதாகவும், தலைமை அதனை பரிசீலித்தே நாளை முதல் விருப்ப மனுக்களை பெற உள்ளதாகவும் கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பல அதிமுக தலைவர்கள், பாரதிய ஜனதாவுடன் கூட்டணியில் நீடிக்க விரும்பாதது போலவே பேசிவருவதும், அதிமுகவுக்குள் நிலவும் பல இடியாப்ப சிக்கல்களும் பாஜகவை கூட்டணி முறிவை நோக்கித் தள்ளுவதாகவும் கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும், ஒரு பக்கம் சசிகலா, டிடிவியால் கடும் நெருக்கடியை சந்தித்துவரும் அதிமுகவுக்கு - பாமகவைப் போல பாஜகவும் தனித்துப் போட்டி என்று அறிவித்தால் அது பெரும் பின்னடைவாய் அமையும்.

Follow Us:
Download App:
  • android
  • ios