மீண்டும் ஆட்சியை கைப்பற்றியே ஆகவேண்டும் என வியூகங்களை வைகுத்துள்ள பாஜக எதிர்கட்சிகளின் முக்கியத் தலைவர்களை வீழ்த்த பலமான வேட்பாளர்களை களமிறக்கி அதிர்ச்சி கொடுக்க தயாராகி வருகிறது.

 

மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியலை பிரதமர் மோடி தலைமையிலான மத்தியத் தேர்தல் குழு தேர்வு செய்தது. இந்தக் குழுவில் பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் இடம்பெற்றனர். இந்தப் பட்டியலின்படி முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் செல்வாக்கான வேட்பாளர்களை பாஜக களமிறக்கியுள்ளது. 

சபரிமலை பிரச்னையில் முன்நின்று போராடிய கும்மண்ணம் ராஜசேகரனை முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூருக்கு எதிராகவும், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த மருத்துவர் உமேஷ் ஜாதவை மக்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எதிராகவும், தமிழக பாஜக தலைவர் தமிழிசையை திமுகவை சேர்ந்த கனிமொழிக்கு எதிராகவும் களமிறக்கியுள்ளனர்.

2014ம் ஆண்டு ராகுலை எதிர்த்து போட்டியிட்டு தோற்று மத்திய அமைச்சரான ஸ்மிருதி இரானி இந்த முறையும் அமேதி தொகுதியில் களமிறங்குகிறார். மத்திய அமைச்சர்கள் வி.கே.சிங் காசியாபாத் தொகுதியிலும், மகேஷ் சர்மா நொய்டா தொகுதியிலும், கிரண் ரிஜிஜு கிழக்கு அருணாச்சலப் பிரதேசத்திலும், ஜிதேந்திர சிங் உத்தம்பூர் தொகுதியிலும் போட்டியிட உள்ளனர். இதனால், காங்கிரஸ் கட்சியினர் பாஜவின் வியூகங்களை சமாளிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.