இஸ்லாமியர்களின் இறைத்தூதார் குறித்து சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து மோசமாக கருத்துக்களை வெளியிட்டு வந்ததாக, பா.ஜ.க பிரமுகர் மீது போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

இஸ்லாமியர்களின் இறைத்தூதரான நபிகள் நாயகத்தை பற்றி பா.ஜ.க கட்சியை சேர்ந்த கல்யாண ராமன் என்பவர் தொடர்ந்து சமூக வலை தளங்களில் அவதூறான கருத்துக்களை பரப்பி வந்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து ஏற்கனவே  தேசிய லீக் கட்சியினர், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் மற்றும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர். 

மேலும் இவர் மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும், மத உணர்வுகளை காயப்படுத்தும் வகையிலும் சில வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும் தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. 

இதைதொடந்து , பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாண ராமன் மீது  குனியமுத்தூர் போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் 153 (A) , 505 ( 2 ) ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ்   வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.