திமுகவில் மீண்டும் இணைய பெரும் முயற்சி மு.க.அழகிரிக்கு பாஜக மத்திய அமைச்சர் பதவி வழங்குவதாகக் கூறி அவரை சுற்றிச் சுற்றி வலம் வருகிறது. 

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி கருணாநிதி இறந்த பிறகு மீண்டும் இணைய கெஞ்சிப்பார்த்தார்... மிரட்டிப்பார்த்தார்... ஆனாலும் அத்தனை கதவுகளையும் மு.க.ஸ்டாலின் மூடிவிட்டதால் அமைதியாகி விட்டார் மு.க.அழகிரி. இந்நிலையில் கடந்த சிலபல மாதங்களாக அழகிரிக்கு அழைப்பு விடுத்து வருகிறது பாஜக.

கன்னியாகுமரிக்கு அடுத்து வரும் மக்களவை தேர்தலில் மதுரை தொகுதியை கைப்பற்ற தனி ஆர்வத்தனம் காட்டி வருகிறது பாஜக தலைமை. அங்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை களமிறக்கத் திட்டமிட்டுள்ளது. அதற்காகவே மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை போன்ற பல்வேறு திட்டங்களை தீட்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

இந்நிலையில், திமுகவைவிட்டு ஒதுங்கியிருக்கும் மு.க.அழகிரியை பாஜகவுக்குள் இழுத்துப்போட அக்கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து முயன்று வருகின்றனர். “பாஜக கட்சியில் இணைந்தால் மதுரை தொகுதியில் வேட்பாளராக்கி மத்திய அமைச்சராக்கி அழகுபார்ப்போம் என அழகிரிக்கு ஆசை காட்டி வருகிறார்கள். மோடி மதுரைக்கு வந்தபோது அழகிரியைச் சந்திக்க வைக்கவும் பாஜக தரப்பில் முயற்சி செய்து பார்த்துள்ளனர். ஆனாலும், பிடியும் கொடுக்காமல், விட்டும் கொடுக்காமல் அன்பாக மறுத்து விட்டாராம் அழகிரி.

இதுகுறித்து அழகிரி ஆதரவாளர்கள் கூறுகையில், ‘’ மத்திய அமைச்சர் பதவி ஆஃபர் கொடுத்து பாஜக தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அண்ணன் மறுத்து விட்டார். சேர்ந்தால் திமுகவில்தான் சேர்வது என்பதில் உறுதியாக இருக்கிறார் அண்ணன். அதற்கான நேரமும் கனிந்து கொண்டிருக்கிறது” என்கிறார்கள். மீண்டும் திமுவில் இணைய அழகிரி முயற்சி எடுக்கும் தகவல் ஸ்டாலின் காதுகளையும் வந்தடைய மீண்டும் கட்சியில் இணைய என்னென்ன அழுத்தங்களை கொடுக்கப்போகிறாரோ என மு.க.ஸ்டாலின் டென்ஷனாகி வருகிறார் என்கிறார்கள்.