ஆட்டக்கடிச்சி மாட்டக்கடிச்சி மனுஷன கடிச்ச கதையா, பாராளுமன்ற துணை நபாநாயகர் தம்பிதுரை மீதே கைவைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாம். சமீப காலமாக அதிமுகவில் உள்ள எந்த தலைவரையும்விட மத்திய அரசையும் திமுகவையும் அதிகளவில் போட்டு தாக்கி வருபவர் கரூர் நாடாளுமன்ற உறுப்பினரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரைதான்.

திமுகவுக்கும் பாஜகவுக்கும் கூட்டணி ஏற்பட்டு விட்டது என தனது டெல்லி சோர்ஸ்கள் மூலம் தெரிந்த தகவல்களை எடுத்து, மைக்  நீட்டும் இடமெல்லாம் வெச்சு விளாசி வருகிறார். விஜயபாஸ்கர் வீடு ரெய்டு கூட திமுகவின் தூண்டதலின்பேரில் பாஜக நடந்து கொள்வதாகவும் தன் திருவாய் மலர்ந்திருந்தார். இது குறித்து நம் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் விரிவாக பதிவிட்டிருந்தோம். 

ஜெ., மரணமடைந்து, சசிகலா கழக பொதுச்செயலாளராகி, எடப்பாடியார் முதல்வராக பதவியேற்ற காலங்களில் டெல்லிக்கும், தமிழகத்துக்கு இடையில் ஒரு பாலமாகவே இருந்தவர் நாடாளுமன்ற துணை சபாநாயகரான தம்பிதுரை. சொல்லப்போனால் தமிழக மீதான மோடி அரசின் அழுத்தங்களை ‘இயல்பான மற்றும் நலன் தரக்கூடிய ஒன்றுதான்’ என்கிற ரீதியிலேயே பேசிவந்தார். 

தமிழகத்தில் தி.மு.க. உடனான கூட்டணியை நோக்கி பி.ஜே.பி. நகர்ந்து வருவதாக சொன்னவர், அழகிரியின் பேரணியன்று அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் ஐ.டி. ரெய்டை மத்திய அரசு நடத்தியதே பேரணி மீதான மக்களின் கவனத்தை திசைதிருப்பத்தான். ஸ்டாலினுக்கு சப்போர்ட்டீவான நடவடிக்கை இது என்று தாளித்தார். இது மத்தியரசை கடுப்பாக்கியது. 

இந்த நிலையில் அடுத்த நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தனது கரூர் தொகுதிக்குள் மெதுவாக வலம் வர துவங்கி விட்டார் தம்பிதுரை. அடிப்படை வசதிகள் இல்லை! என்று மக்கள் பல இடங்களில் அவரை மறிக்கிறார்கள். ஆனாலும் அவர் அசராமல் அங்கே நின்று மத்தியரசுக்கு எதிராகவே பேட்டி தட்டுகிறார். 

திண்டுக்கல், வேடசந்தூரில் பேசும்போது, பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்தியரசுதான் குறைக்க வேண்டும். மாநில அரசால் அதிகளவில் குறைக்க முடியாது. தனியார் நிறுவனங்கள் அதிகளவில் பயன்படையும் வகையில் மத்தியரசு செய்து விட்டது. மாநில அரசின் அதிகாரங்களையும், உரிமைகளையும் முழுமையாக மத்தியரசு பறித்துவிட்டது என்றார்.

உளவுத்துறை மூலமாக இந்த தகவல் அடுத்த சில நிமிடங்களில் டெல்லியை சென்றடைந்து விட்டது. தம்பிதுரையின் தொடர் எதிர்ப்பு பேச்சுக்களால் கடுப்பான மேலிடம், அவரது ஃபைலை எடுக்க சொல்லியிருக்கிறது. அதன்படி மிக விரைவில் தம்பித்துரை ஷாக் ஆகும் வண்ணம் ரெய்டு உள்ளிட்ட ஏதோ ஒன்று நடக்கலாம் என்கிறார்கள். இந்த நிலையில், சிபிஐ வளையத்துக்குள் தம்பிதுரையை கொண்டு வர மத்திய அரசு முயல்வதாக கூறப்படுகிறது.