இந்த ஆண்டு நீட் தேர்விலிருந்து விலக்கு கோர முடியாது என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறினார்.

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் இருள் நீக்கியில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் ஜெயந்தி விழா நடந்தது. அதில் கலந்து கொள்வதற்காகத பாஜக செயலாளர் எச். ராஜா சென்றார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 38 ஆயிரம் கோவில்களின் சொத்து விவரங்கள் குறித்து 3 மாதத்துக்குள் தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

நீட் தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த காலக்கெடு முடிந்து ஒரு ஆண்டு ஆகிவிட்டது. மாணவர்களும் நீட் தேர்வை எழுதி விட்டனர். இந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோர முடியாது.

இந்தாண்டு நீட் தேர்வை எழுதிய மாணவர்கள் ரேங்க் பட்டியலுக்காக காத்திருக்கின்றனர். இந்த நிலையில் நீட் தேர்வு குறித்து வரும் 10ம் தேதி நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

டெல்லி சென்று நீட் தேர்வுக்கு இந்தாண்டு விலக்கு கிடைக்க முயற்சிப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி வருகிறார். இது, ஏற்புடையது அல்ல. அவர் எந்த அடிப்படையில் அப்படி சொல்கிறார் என்பது தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.