ஹெச்.ராஜா ஒரு தியாக செம்மல்... கருணாசுடன் ஒப்பிடவே கூடாது...! பிஜேபி தலைவர்போல் பேசிய அமைச்சரான உதயகுமார்
திருவாடானை எம்.எல்.ஏ. கருணாஸ், அண்மையில் சென்னையில் நடந்த முக்குலத்தோர் புலிப்படை நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது,
முதலமைச்சர் பற்றியும், காவல் துறை பற்றியும் கடும் வார்த்தைகளால் பேசியிருந்தார்.
திருவாடானை எம்.எல்.ஏ. கருணாஸ், அண்மையில் சென்னையில் நடந்த முக்குலத்தோர் புலிப்படை நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது,
முதலமைச்சர் பற்றியும், காவல் துறை பற்றியும் கடும் வார்த்தைகளால் பேசியிருந்தார். அதனைத் தொடர்ந்து எம்.எல்.ஏ. கருணாஸ்
கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இதன் பின்னர், கருணாஸ் ஜாமினில் வெளியே வந்தார்.
கடந்த சில தினங்களுக்கு நெல்லை, செங்கோட்டையில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது, பாஜக தேசிய செயலாளர்
ஹெச்.ராஜாவுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ஹெச்.ராஜா, காவல் துறை மற்றும் நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த நிலையில், எம்.எல்.ஏ. கருணாசை விட கடுமையாக பேசிய ஹெச்.ராஜாவை கைது செய்யாதது ஏன்? என்று எதிர்கட்சி தலைவர்கள் பலரும் கேட்டு வந்தனர்.
இந்த நிலையில், வருவாய் துறை அமைச்சர் உதயகுமாரிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், ஹெச்.ராஜா என்பவர், இந்தியாவில் உள்ள 19 மாநிலங்களை ஆட்சி செய்யும் கட்சியை சேர்ந்தவர். கொள்கை, லட்சியத்தோடு உள்ள பாரத பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இயங்குகின்ற, நாட்டிற்காக உழைத்தவர். ஒரு இயக்கத்தின் தேசிய செயலாளராக இருப்பவர். இந்த இடத்தை அவர் அடைவதற்கு எத்தனை உழைப்புகள், சேவைகள், தியாகங்கள் செய்திருப்பார் என்பதை அனைவரும் எண்ணிப்பார்க்க வேண்டும் என்றார்.
மேலும் பேசிய அவர், அதிஷ்டத்தால் எம்.எல்.ஏ.வாகி இன்று அதிர்ஷ்டத்தை தொலைத்துவிட்டு விளம்பரத்திற்காக உளறிக் கொண்டிருக்கும் கருணாசையும், ஹெச்.ராஜாவையும் ஒப்பிடக் கூடாது என்றார். ஒரு சில அதிமுக அமைச்சர்கள் பாஜகவை தாக்கியும், ஒரு சில அதிமுக அமைச்சர்கள் பாஜகவை புகழ்ந்தும் பேசி வருகின்றனர். அதிமுக-பாஜக கட்சிகளுக்கு இடையே உள்ள உறவை புரிந்து கொள்ள முடியவே இல்லை என்று பொதுமக்கள் கருத்து கூறி வருகின்றனர்.