ராகுல் காந்தியால் இந்திய குடியுரிமை சட்டம் குறித்து பத்து வரி பேச முடியுமா என பாஜக தலைவர் ஜேபி நட்ட கேள்வி எழுப்பியுள்ளார் .  பாஜக தலைவராக பதவியேற்றுள்ள ஜேபி நட்ட முதல்முறையாக குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு இவ்வாறு பேசியுள்ளார் இந்திய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து  வருகிறது , 

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் இச்சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக நடந்து வருகிறது .  கேரளா ,  மேற்கு வங்கம் , உள்ளிட்ட மாநிலங்கள் தங்களது மாநிலத்தில் இந்த சட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர் .  இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் நடந்த தேசிய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவான கூட்டத்தில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் , பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர் அப்போது பேசிய நட்டா ,  காங்கிரஸ் மற்றும் அதன் தலைமை மனநல திவால் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளது என்றார்,   அதனால் தான் அவர்கள் வெளியிடும் அறிக்கைகள் அனைத்தும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவே உள்ளது என விமர்சித்தார். 

குடியுரிமைச் சட்டத்தை எதிர்க்கும் ராகுலால் அந்த சட்டம் பற்றி பத்து வரி ஒழுங்காக பேச முடியுமா என கேள்வி எழுப்பிய அவர்,  அப்படி பேசிவிட்டால் ராகுல்  சொல்வதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம் என்றார்.   சிஏஏ சட்டம் பற்றி ராகுலுக்கு எதுவுமே தெரியாது என்ற அவர் காங்கிரஸ் தலைவர்கள் மக்களை தவறாக வழி நடத்துகின்றனர் என்றார் .  இந்தச் சட்டம் குடியுரிமை வழங்குவதற்காகவே கொண்டுவரப்பட்டதே  தவிர யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்காக அல்ல என்றார்.