மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து பாஜக ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக அக்கட்சியின் சிவராஜ் சிங் சௌஹான் 4வது முறையாகும் பதவியேற்றுக்கொண்டாா். போபாலில் நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற கட்சித் தலைவராக சிவராஜ் சிங் சௌஹான் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டதை தொடர்ந்து திங்கள்கிழமை இரவு 9 மணிக்கு ஆளுநா் லால்ஜி டாண்டன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

மத்திய பிரதேச முதல் மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான் பதவியேற்றார்

முன்னதாக மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தது. அங்கு முதல்வராக கடந்த 15 மாதங்களாக கமல்நாத் இருந்து வந்தார். இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவராக விளங்கிய ஜோதிராதித்ய சிந்தியா உட்கட்சி பூசல் காரணமாக கட்சியில் இருந்து திடீரென விலகி பாஜகவில் இணைந்தாா்.

அவருக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 22 பேர் தங்களது பதவியை ராஜிநாமா செய்து பாஜகவில் இணைந்தனா். இதனால் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இழக்கவே முதல்வா் பதவியிலிருந்து கமல்நாத் ராஜிநாமா செய்தாா். இதையடுத்து மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க பாஜக முயற்சி எடுத்தது குறிப்பிடத்தக்கது.