இந்திய குடியரசு கட்சியின் தலைவராகவும் மராட்டிய மாநிலத்தின் மிக முக்கியமான தலித் தலைவராகவும் இருப்பவர் ராம்தாஸ் அத்வாலே. கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர் பதவியை பா.ஜ.க அளந்து தான் கொடுத்தது. அப்படி இருந்தும் ராம்தாஸ் அத்வாலே மத்திய அமைச்சரானார். அதுமட்டும் இல்லாமல் அத்வாலேவுக்கு ராஜ்யசபா எம்.பி பதவியையும் கொடுத்தது பா.ஜ.க.

இந்த அளவிற்கு பா.ஜ.க தலைவர்களுடன் நெருக்கமாக இருப்பவர் ராம்தாஸ் அத்வாலே. இவர் நேற்று புதுச்சேரிக்கு வருகை தந்திருந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய ராம்தாஸ் அத்வாலே கூறியிருப்பதாவது: மோடி மீண்டும் பிரதமர் ஆவது உறுதி. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க கூட்டணி தான் வெற்றி பெறும். மோடியை எதிர்க்கும் அளவிற்கு எதிர்கட்சிகளிடம் பிரபலமான தலைவர்கள் யாரும் இல்லை.

மோடிக்கு நிகரான ஒரு தலைவர் இல்லாமல் நாடாளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கட்சிகள் எதிர்கொள்ள முடியும். சில விஷயங்களில் மக்கள் பா.ஜ.க அரசு மீது அதிருப்தியில் இருக்கலாம், ஆனால் அதற்காக நாடாளுமன்ற தேர்தலில் அவர்கள் மோடிக்கு வாக்களிக்காமல் போய்விடுவார்கள் என்று அர்த்தம் இல்லை. பா.ஜ.கவில் உள்ள சில தலைவர்கள் செய்யும் காரியத்தால் மோடிக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது.

தேர்தல் நேரத்தில் அனைத்தும் சரியாகிவிடும். தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி என்பது இறுதியாகிவிட்டது. தமிழக மக்களின் மற்றும் அ.தி.மு.க நலன் கருதி தினகரன் முடிவெடுக்க வேண்டும். தினகரன் நிச்சயமாக அ.தி.மு.கவுடன் மீண்டும் தன்னை இணைத்த செயல்பட வேண்டும். இது தான் அ.தி.மு.க மற்றும் தினகரனுக்கு நல்லது. இவ்வாறு அத்வாலே கூறியுள்ளார்.

மத்திய அமைச்சராக இருக்க கூடிய அத்வாலே சாதாரணமாக இரண்டு கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி குறித்து பேசக்கூடியவர் அல்ல. டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைவர்கள் அனைவருடனும் நேரடியாக தொடர்பில் இருப்பவர் அத்வாலே. எனவே டெல்லியில் பா.ஜ.க தலைவர்கள் மூலமாகவே அ.தி.மு.கவுடனான கூட்டணி விவகாரம் அத்வாலேவுக்கு தெரியவந்திருக்கும். அதனையே புதுச்சேரியில் வைத்து அத்வாலே அம்பலப்படுத்தி சென்று இருக்கலாம்.