கும்மிடிபூண்டி தாண்டுனா ஸ்டாலினை யாருக்கு தெரியும்.? ஒலிம்பியாட் போஸ்டரில் மோடி படத்தை ஒட்டிய அமர் பிரசாத்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி போஸ்டரில் பிரதமர் மோடியின் புகைப்படம் தவிர்க்கப்பட்டுள்ள நிலையில் பாஜக நிர்வாகிகள் அந்த போஸ்டர்களில் மோடியின் படத்தை ஒட்டி வருகின்றனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி போஸ்டரில் பிரதமர் மோடியின் புகைப்படம் தவிர்க்கப்பட்டுள்ள நிலையில் பாஜக நிர்வாகிகள் அந்த போஸ்டர்களில் மோடியின் படத்தை ஒட்டி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் செய்யப்பட்ட ஒலிம்பியாட் விளம்பரத்தில் பாஜக இளைஞர் மற்றும் விளையாட்டு திறன் அணித்தலைவர் அமர் பிரசாத் ரெட்டி மோடியின் புகைப்படத்தை ஒட்டினார்.இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28 ஆம் தேதி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. போட்டிக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்ட முறையில் நடைபெற்று வருகிறது, இப் போட்டியை தொடங்கி வைக்க தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பிரதமருக்கு அழைப்பு விடுத்தார், அதைத் தொடர்ந்து ஜூலை 19ஆம் தேதி தமிழக எம்பிக்கள் டி.ஆர் பாலு, கனிமொழி மற்றும் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் அடங்கிய குழு பிரதமரை நேரில் சந்தித்து அவருக்கு அழைப்பு விடுத்தது. இதை ஏற்று பிரதமர் வரும் 28 ஆம் தேதி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வர உள்ளார். தொடக்க விழா மற்றும் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
28 ஆம் தேதி போட்டியை தொடங்கி வைக்க அகமதாபாத்திலிருந்து பிரதமர் சென்னை வருகை தர உள்ளார், சென்னை விமான நிலையத்தில் மாலை 4:45 மணிக்கு பிரதமர் வர உள்ளார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அவர் சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் தளத்திற்கு வருகை தருகிறார், பின்னர் கார் மூலம் நேரு விளையாட்டு அரங்கிற்கு செல்லும் அவர், ஒலிம்பிக் போட்டியை தொடங்கி வைக்கிறார். பின்னர் ஆளுநர் மாளிகையில் அவர் தங்குகிறார். மறுநாள் 29 ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் 42வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
இதையும் படியுங்கள்: "முதலமைச்சராக இல்ல ஒரு அப்பாவாக கேட்கிறேன்".. தயவு செய்து கேளுங்க.. உருக்கமாக பேசிய ஸ்டாலின்..
இப்படியாக பிரதமர் மோடியின் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஒலிம்பிக் போட்டி தொடர்பான விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இந்த விளையாட்டுப் போட்டி பிரதமர் மோடியால் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது, ஆனால் இந்த போஸ்டர்களில் பிரதமர் புகைப்படமோ அல்லது பெயரோ இடம்பெறவில்லை, இதை பாஜகவினர் கண்டித்து வருவதுடன், திட்டமிட்டு பிரதமரின் பெயரை தமிழக அரசு இருட்டடிப்பு செய்துள்ளதாகவும் கூறிவருகின்றனர்.
இதையும் படியுங்கள்: இபிஎஸ் தூதுவராக செயல்பட்டாரா தம்பிதுரை...! மோடியுடன் திடீர் சந்திப்பில் பேசியது என்ன..?
இந்நிலையில் தமிழ்நாடு பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு சார்பில் செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பாரத பிரதமரின் புகைப்படத்தை ஒட்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாஜகவின் இளைஞர் மற்றும் விளையாட்டு திறன் அணி தலைவர் அமர் பிரசாத் ரெட்டி இன்று சென்னையில் செய்யப்பட்டுள்ள விளம்பர பலகைகளில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஓட்டினார்.மேலும் இது தொடர்பான வீடியோவில் அவர் பாஜக தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதன் விவரம் பின்வருமாறு:-
அனைவருக்கும் வணக்கம்... மத்திய அரசின் ஏற்பாட்டின் பேரில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ் நாட்டில் நடக்கிறது. இதை மாநில அரசு நடத்துகிறது, ஆனால் இதில் முழுக்க முழுக்க முதல்வருக்கு மட்டுமே விளம்பரம் செய்யப்பட்டு இருக்கிறது, அவர் முதல்வர்தான், கும்முடிபூண்டி தாண்டினால் அவரை யாருக்கும் தெரியாது, இது சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டி, இது மாநில செஸ் போட்டி அல்ல எனவே இதில் பிரதமரின் புகைப்படத்தை போடாமல் எல்லா இடத்திலும் விளம்பரம் செய்து விட்டார்கள், இது ஏதோ திமுக நிகழ்ச்சி அல்ல, இது அரசாங்க நிகழ்ச்சி, எனவே இதில் பிரதமரின் புகைப்படம் இடம் பெற வேண்டும்.
வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு ஸ்டாலின் புகைப்படத்தை பார்த்தால் யார் என்று தெரியாது. பிரதமர் மோடியை தான் தெரியும், எனவே தமிழ்நாடு முழுக்க விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு பாஜக சார்பில் உள்ள அனைத்து தொண்டர்களும் இதுபோல ஒலிம்பியாட் விளம்பரத்தில் மோடியின் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும், ஸ்டிக்கர் அரசாங்கத்திற்கு ஸ்டிக்கர், இதை உடனடியாக செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.