7 சிலைகளை 5 கோடி ரூபாய்க்கு விற்க முயற்சித்த பாஜக சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
7 சிலைகளை 5 கோடி ரூபாய்க்கு விற்க முயற்சித்த பாஜக சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள ஏராளமான கோயில்களில் இருந்து சிலைகள் பல திருடுபோயுள்ளன. அவற்றை மீட்கும் நடவடிக்கைகளில் போலீசார் இறங்கி உள்ளனர். அண்மையில் மாமல்லபுரம் அருகே உள்ள சொகுசு விடுதி ஒன்றில் இருந்து பழமையான சிலை கண்டுபிடிக்கப்பட்டது.
மாவட்டங்கள் தோறும் சிலை கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரம் அடைந்து வரும் நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் பகுதியில் பழமைவாய்ந்த சிலைகளை மர்மநபர்கள் கடத்தி விற்க முயற்சிப்பதாக தகவல்கள் கிடைத்தது. தங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் என்று கூறி சிலைகளை விற்க அவர்கள் முயற்சிப்பதாகவும் தகவல்கள் கசிந்தன.
மேலும் சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே மலை அடிவாரத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட 7 சிலைகளை இந்த கும்பல் 5 கோடி ரூபாய்க்கு பேரம் பேசி இருப்பதாகவும் முக்கிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து, மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் களத்தில் இறங்கினர்.

தீவிர தேடுதல் வேட்டையின் முக்கிய திருப்பமாக சிலைகளை விற்க முயற்சித்த ஒருவரை கையும், களவுமாக கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணையும் நடத்தப்பட்டது. அதில் கிடைத்த தகவல்கள் போலீசாரையே அதிர வைத்தது.
பிடிபட்டவர் பெயர் அலெக்சாண்டர். இவர் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்தவர். இவர் ராமநாதபுரம் பாஜக சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட செயலாளராக உள்ளார். மேலும் பழமை வாய்ந்த 7 சிலைகளை அருப்புக்கோட்டை காவலர் இளங்குமரன், விருதுநகர் கருப்பசாமி ஆகியோர் தந்ததாகவும் காவ்லதுறை விசாரணையில் கூறி உள்ளார்.
அவரை தொடர்ந்து, காவலர் இளங்குமரன், கருப்புசாமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் இளங்குமரன், கருப்பசாமி இருவரும் 4 ஆண்டுகளுக்கு முன்பாக திண்டுக்கல் ஆயுதப்படை காவலர் நாகநரேந்திரன், திருத்தங்கலை சேர்ந்த கணேசன் ஆகியோருடன் சேர்ந்து எடப்பாடி அருகே உள்ள மலை அடிவாரம் சென்றுள்ளனர். அங்கு சிலைகள் கடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு என்று கூறி பழமையான சிலைகளை கடத்திக் கொண்டு வந்ததுள்ளதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர். இப்படி பறித்து கொண்டு வந்த சிலைகளை கூரிசேத்தனார் அடுத்துள்ள அய்யனார் கோவில் பின்புறம் கால்வாய் ஒன்றில் புதைத்து வைத்துள்ளதாகவும் கூறி இருக்கின்றனர்.

அதன் பின்னர் போலீசார் கால்வாயில் பதுக்கி வைத்த நடராஜர் சிலை, நாக கன்னிசிலை, முருகன் சிலை உள்ளிட்ட 7 பழமைவாய்ந்த சிலைகளை மீட்டனர். இந்த சிலை கடத்தல் விவகாரத்தில் ராஜேஷ், கணேசன் ஆகிய 2 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் மும்முரமாக களம் இறங்கி இருக்கின்றனர்.
சிலை கடத்தல் வழக்கில் பாஜக மாவட்ட செயலாளர் ஒருவர் கைது ஆகி இருப்பது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. 2014ம் ஆண் திருப்பனந்தாள் கோவில் சிலை திருட்டு வழக்கில் அலெக்சாண்டர் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
