bjp master plan to destroy admk
தமிழகத்தின் இருபெரும் காட்சிகளாக இருக்கும் அதிமுகவை உடைத்து தடயம் இல்லாமல் செய்து விட்டு, அதன் பின்னர் திமுகவையும் உடைப்பதுதான் பாஜக மேலிடத்தின் திட்டமாக இருந்தது.
ஜெயலலிதா இறந்த பிறகு ஓ.பி.எஸ்ஸை பகடை காயாக வைத்து அந்த திட்டத்தை நிறைவேற்றும் முயற்சியில் இறங்கியது பாஜக. ஆனாலும், அதை வலுவாக எதிர்த்து நின்று, கூவத்தூரில் எம்.எல்.ஏ க்களை தங்கவைத்து அதற்கு பதிலடி கொடுத்தது சசிகலா தரப்பு.
ஆனாலும், சொத்துக் குவிப்பு வழக்கில், சசிகலா சிறையில் தள்ளப்பட்டு, எடப்பாடி முதல்வர் ஆனார். அதிமுகவின் துணை பொதுச்செயலாளராக தினகரன் பொறுப்பேற்றார்.
எனினும், ஆர்.கே.நகர் தேர்தலில், அதிமுகவின் பெயர், இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை முடக்கி, ஒரு செக் வைத்தது தேர்தல் ஆணையம். அதையும் மீறி, பணத்தை வாரி இறைத்து, தினகரன் ஆர்.கே. நகரில் வெற்றியின் விளிம்பை நெருங்கி கொண்டிருந்தார்.
அதையடுத்து, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரைடு நடத்தி, அதை காரணமாக வைத்து, ஆர்.கே.நகர் தேர்தலை நிறுத்தி வைத்தது தேர்தல் ஆணையம்.
அதன் பிறகும், கட்சியையும், சின்னத்தையும் கைப்பற்றுவதற்காக, ஸ்டாம்ப் பேப்பரில், கிளை நிர்வாகிகள் முதல், மாநில பொறுப்பாளர்கள் வரை மாவட்டம் தோறும் கையெழுத்து வேட்டையில் இறங்கியது தினகரன் தரப்பு.
இவ்வாறு, பாஜக மேலிடம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் உரிய பதிலடியை கொடுத்துக் கொண்டே வந்தார் தினகரன்.
இந்நிலையில், தெற்கு டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரா என்பவரிடம் இருந்து, ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெற்று தருவதற்காக, தினகரன் கொடுத்த பணமே அது என்று சுகேஷ் சந்திரா போலீசாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
மேலும் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக 60 கோடி ரூபாய் வரை லஞ்சம் தர தயாராக இருப்பதாக, தினகரன் தம்மிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவரிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில், தினகரன் மீது வழக்கு பதிவு செய்துள்ள டெல்லி போலீசார், தினகரனை கைது செய்வதற்காக தமிழகம் வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சசிகலா அல்லாத அதிமுகவை உருவாக்கும் முயற்சியில், பன்னீர் - எடப்பாடி ஆகிய இரு தரப்பினர் சார்பிலும் சமரச பேச்சு வார்த்தை தொடங்கிய சூழ்நிலையில், அதற்கு பெரும் இடையூறாக இருந்து வருபவர் தினகரன்.
அத்துடன், அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது குறித்த இரண்டாம் கட்ட விரிவான விசாரணை, இன்று டெல்லி தேர்தல் ஆணையத்தில் நடக்க இருக்கிறது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள ஒருவரிடம் 1 கோடியே 30 லட்சத்தை பறிமுதல் செய்து, அதை கொடுத்தவர் என்ற பெயரில் தினகரன் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்யும் முயற்சியில் டெல்லி போலீசார் ஈடுபட்டிருப்பது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
தினகரன் மீது ஏற்கனவே இருக்கும், அந்நிய செலாவணி மோசடி வழக்குகள் தீவிரப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், கட்சி சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுத்தார் என்ற புகாரில் மேலும் அவர் மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதை பார்க்கும்போது, எதை எதையோ யோசிக்க வைக்கிறது.
குறிப்பாக சொன்னால், தினகரனின் செயல்பாடுகளை ஒட்டுமொத்தமாக முடக்கி, அவர் வாயிலாகவே சசிகலா குடும்பத்தின் கடைசி அரசியல் அத்தியாயத்தை எழுதும் முயற்சி நடைபெறுவதாகவே எண்ண வேண்டியுள்ளது.
