ஜெயலலிதா இல்லாத நிலையில் அதிமுகவை உடைத்த பாஜக, தற்போது மீண்டும் அதை ஒருங்கிணைக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.

சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் அற்ற, அந்த அதிமுகவில் பன்னீர் முதன்மையாகவும், எடப்பாடி இரண்டாம் நிலையிலும் இருப்பார்.

ஒருவேளை, எடப்பாடி கட்டுப்பாட்டை மீறி சசிகலா தரப்புக்கு விசுவாசம் காட்ட முனைந்தாலோ, ஒருங்கிணைந்த கட்சி தமது கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டதால், தமக்கு எதிராக பன்னீர் திரும்பினாலோ, அதை எப்படி எதிர்கொள்வது என்பதையும் பாஜக யோசித்து வைத்துள்ளது.

ஒருங்கிணைந்த அதிமுக ஆட்சியில் பன்னீர் முதல்வராக இருந்து ஆட்சி செய்வது, அதன் மூலம் தமிழகத்தில் பாஜகவை வளர்ப்பதுவே பாஜகவின் முதல் திட்டம்.

அதற்காக, வரும் உள்ளாட்சி தேர்தல் தொடங்கி அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வரை பாஜக-அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிடவேண்டும் என்பதையே பாஜக விரும்புகிறது.

ஆனால், அதற்கு இடையூறாக, பன்னீரே, எடப்பாடியோ நடந்து கொண்டால், கொஞ்சமும் தயவு தாட்சண்யம் இல்லாமல், ஆட்சியை கலைத்துவிடலாம் என்றே எண்ணுகிறது.

அதன் முதல் கட்டமாக, ஒரு வலுவான ஆளுநரை தமிழகத்திற்கு நியமிப்பது. அவரது மேற்பார்வையில் பாஜகவை வளர்ப்பதுதான் பாஜக வகுத்துள்ள வியூகம்.

இரண்டாண்டு காலம், தமிழத்தில் ஆளுநர் ஆட்சியை கொண்டு வந்து, அந்த இரண்டு ஆண்டுகளில், பாஜக வின் நல திட்டங்களை எல்லாம் தமிழகத்தில் செயல்படுத்தி விடவேண்டும்.

திமுக, அதிமுக போன்ற கட்சிகளை உடைத்து தடம் தெரியாமல் அழிப்பது, ஊழல் மற்றும் பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள தலைவர்களை சிறையில் தள்ளுவது ஆகியவற்றின் மூலம், பாஜகவை வலுவாக நிலை நிறுத்தலாம் என்றும் எண்ணுகிறது.

இந்த இரண்டு செயல் திட்டங்களும் தயாராக உள்ள நிலையில், சசிகலா அல்லாத அதிமுக சாத்தியமானாலும், பன்னீர்-எடப்பாடி விசுவாசமாக இருந்தாலும் முதல் திட்டம் ஓ.கே. ஆகும்.

அப்படி இல்லையெனில், ஆட்சி கலைப்பும், இரண்டாண்டுகால ஆளுநர் ஆட்சிக்கு வழி பிறக்கும் என்றே சொல்லப்படுகிறது.