மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தலில், ஒட்டுமொத்தமாக காங்கிரசை விட பா.ஜ., கூடுதல் ஓட்டுக்கள் பெற்று இருந்தாலும், ஆட்சியை பறி கொடுத்துள்ளது. ராஜஸ்தானில், பாஜக விட, அரை சதவீதம் மட்டுமே கூடுதலாக ஓட்டுகளை பெற்ற காங்கிரஸ் கட்சி  ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் கடந்த 2003ம் ஆண்டு முதல், 15 ஆண்டுகளாக பாஜக  ஆட்சி நடைபெற்றது. தொடக்கத்தில் உமாபாரதி, பாபுலால் கவுர் ஆகியோர் முதலமைச்சர்களாக  இருந்துள்ளனர்.

2008 முதல், சிவராஜ் சிங் சவுகான் முதலமைச்சராக  இருந்து வந்துள்ளார். இங்கு, கடந்த நவம்பர் 28 ஆம் தேதி நடந்தது.


பெரும்பான்மைக்கு, 116 இடங்கள் தேவை. ஆனால், காங்கிரஸ், 114 இடங்களிலும் பாஜக 109 இடங்களிலும் தான் வெற்றி பெற்றன. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பிற கட்சிகளின் உதவியுடன் இங்கு காங்கிரஸ் ஆட்சி அமைய உள்ளது.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விவரப்படி பாஜகவுக்கு 1,56,42,980 ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. இது, 41 சதவீதம் ஆகும். காங்கிரசுக்கு, 1,55,95,153 ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. இது, 40.9 சதவீதம்.


காங்கிரசை விட பாஜகவுக்கு 47,827 ஓட்டுகள் அதிகம் கிடைத்துள்ளன. இருந்தாலும், ஆட்சியை பறி கொடுத்துள்ளது. இங்கு, நோட்டாவுக்கு 5,42,295 ஓட்டுக்கள் விழுந்துள்ளன. இது, 1.4 சதவீதமாகும்.


ஆயிரம் ஓட்டுக்களுக்கு குறைவாக 10 தொகுதிகளில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்படி, காங்., 3 தொகுதிகளிலும் பா.ஜ., 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. பினா தொகுதியில், 632; ஜாவ்ரா தொகுதியில், 511; கோலாரஸ் தொகுதியில், 720 ஓட்டு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.


பியோரா தொகுதியில், 826; தாமோக் தொகுதியில், 798; தெற்கு குவாலியர் தொகுதியில், 121; வடக்கு ஜபல்பூர் தொகுதியில், 578; ராஜ்நகர் தொகுதியில், 732; ராஜ்புர், 932; ஸ்வாஸ்ரா தொகுதியில், 350 ஓட்டு வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே தலைமையில் பாஜக ஆட்சி நடந்து வந்தது. கடந்த எட்டு தேர்தல்களாக, இங்கு மாறி மாறி தான் கட்சிகள் ஆட்சி அமைத்து வருகின்றன. மொத்தம் 200 தொகுதிகள் உள்ளன. ஒரு தொகுதியில் வேட்பாளர் இறந்ததால், 199 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடந்தது.


ஓட்டு எண்ணிக்கை முடிவில், காங்கிரஸ் 99 தொகுதிகளையும், பா.ஜ., 73 தொகுதிகளையும் கைப்பற்றின. பெரும்பான்மைக்கு தேவையான, 101 இடங்கள் யாருக்கும் கிடைக்கவில்லை. தனிப்பெரும் கட்சியாக காங்., உருவெடுத்துள்ளது. சுயேச்சைகள் மற்றும் பிற கட்சிகளின் உதவியுடன் இங்கு காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளது.


இங்கு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விவரப்படி காங்கிரசுக்கு மொத்தமாக 1,39,35,201 ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. இது, 39.3 சதவீதம். பாஜகவுக்கு  1,37,57,502 ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. இது 38.8 சதவீதம். அதாவது, காங்கிரசை விட, பா.ஜ., ஓட்டுக்கள் அரை சதவீதம் தான் குறைவு.
அரை சதவீத ஓட்டு வித்தியாத்தில் தான் காங்., வெற்றி பெற்றுள்ளது. அதாவது, பாஜகவை விட, காங்கிரஸ் 1,77,699 ஓட்டுக்கள் தான் கூடுதலாக பெற்றுள்ளது. இந்த மாநிலத்தில் நோட்டாவுக்கு 4,67,781 ஓட்டுக்கள் கிடைத்துள்ளன.

மொத்தத்தில் பாஜக 34 தொகுதிகளில் 300 ஓட்டுக்கும் குறைவாகவும் , 6 தொகுதிகளில் 10 ஓட்டுக்கு குறைவாகவும் .2 தொகுதிகளில் 1 ஓட்டிலும் வெற்றியை தவறவிட்டுள்ளது.