தமிழக காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக உள்ள நடிகை குஷ்பூ பாஜகவில் இணைந்தால் வரவேற்பதாக அக்கட்சியின் தமிழக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக தமிழக காங்கிரஸுக்கும், அதன் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பூவுக்கும் மோதல் போக்கு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. மத்திய பாஜக அரசு வெளியிட்ட புதிய கல்வி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து குஷ்பூ பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தமிழக தலைமை குஷ்பூவுக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் தகவல்.

இந்நிலையில் சமீபத்தில் இறந்த காங்கிரஸ் எம்பி வசந்தகுமாரின் நினைவு கூட்டம் சென்னை காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் காங்கிரஸின் கூட்டணியான திமுகவிலிருந்து மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இதுபற்றிய அழைப்போ விபரமோ கூட தனக்கு தெரிவிக்கப்படவில்லை என குஷ்பூ வருத்தப்பட்டிருந்தார். காங்கிரஸில் தனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என குஷ்பூ குறைப்பட்டு கொண்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் “குஷ்பூ பாஜகவில் இணைந்தால் மகிழ்ச்சியோடு வரவேற்போம்” என கூறியுள்ளார். இதனால் குஷ்பூ காங்கிரஸிலேயே தொடர்வாரா..? அல்லது எல்.முருகனின் கருத்தை அழைப்பாக ஏற்று பாஜகவில் இணைவாரா என அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுந்துள்ளது.
 
முன்னதாக குஷ்பூவின் கணவர் சுந்தர் சி, எல்.முருகனை ரகசியமாக சந்தித்ததாக கூறப்பட்டது. எல்.முருகன் குஷ்பூவை பாஜவுக்கு அழைத்ததை போலவே தமிழக பாஜக துணை தலைவர் அண்ணாமலையும் குஷ்பூவுக்கு அழைப்பு விடுத்திருந்தார். குஷ்பூ மிகவும் தைரியமானவர். அவர் பாஜகவுக்கு வந்தால் சிறப்பாக இருக்கும் எனக் கருத்து தெரிவித்து இருந்தார்.