கூட்டணியில் பெரிய கட்சியான நாங்கள் அறுதிப் பெரும்பான்மையோடு வெல்லும்போது இயல்பாகவே எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் ஆவார். இதில் பாஜகவினர் புரிந்தும் புரியாததுபோல் பேசுகிறார்களா? என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.முதல்வர் வேட்பாளரை டெல்லி தலைமைதான் அறிவிக்கும் என்று பாஜக கூறிவருகிறது.  கூட்டணியின் பெரிய கட்சியான அதிமுக முடிவு செய்யும் விஷயத்தை, அக்கட்சியை விட மிகக் குறைந்த அளவே வாக்கு சதவீதம் கொண்ட பாஜகவினர் ஏன் விவாதப் பொருளாக்குகிறார்கள் என்று அதிமுகவிலும், வெளியிலும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

இந்நிலையில், இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ’’மத்திய அமைச்சர் வேறு ஏதாவது மாநிலம் பற்றிக் கூறியிருப்பார். நமது மாநிலத்தைப் பொறுத்தவரை அப்படி இல்லை. பல தேர்தல்களில் 10 தேர்தல்களில் 7 தேர்தல்களில் வென்றுள்ளோம். அவ்வளவும் அறுதிப் பெரும்பான்மையில்தான் வென்றுள்ளோம். திமுக மாதிரி மைனாரிட்டி அரசாக நாங்கள் தொங்கிக்கொண்டு ஆட்சி நடத்தவில்லை.

திமுக 2006-ல் 86 இடங்கள் பெற்று ஆட்சி செய்தார்கள். அதுமாதிரி நிலையை தமிழ்நாட்டு மக்கள் எங்களுக்குத் தரமாட்டார்கள். எங்களைப் பொறுத்தவரை அறுதிப் பெரும்பான்மையோடு அதிமுக ஆட்சி செய்யும் நிலை உருவாகும் என்ற அடிப்படையில் தீர்ப்புகள் இருக்கும். எங்கள் கட்சி, கூட்டணிக் கட்சிகள் உட்பட அனைவரும் வெற்றிபெறும் நிலையில், நாங்கள் பெரும்பான்மை பெறும் நிலையில், அவர் சொல்வது எப்படி நடக்கும்?

ஆட்சியில் அமர 118 இடங்கள் தேவை. அதை நாங்கள் பெறும்போது எங்கள் கட்சித் தலைவரை எங்கள் எம்.எல்.ஏக்கள் கூடித் தேர்ந்தெடுப்பார்கள். அதில் எப்படி மற்றவர்கள் சொல்வதற்கு வழிவகுக்கும். அதனால் இப்படி வருவதற்கான வாய்ப்பே இல்லை. டெல்லி தலைவர்களுக்குத்தான் தெரியவில்லை என்று வைத்துக்கொண்டால், இங்குள்ள எல்.முருகனும் உங்கள் முதல்வர் வேட்பாளரை ஏற்றுக்கொள்ளவில்லை. கூட்டணியில் அவர்கள் இருக்கிறார்கள். கூட்டணியில் நாங்கள் பெரும்பான்மையாக இருக்கும்போது பொதுவாக யார் முதல்வராக வரமுடியும். அதிமுகவில் இருந்துதானே முதல்வராக வரமுடியும். எங்கள் தலைவரை நாங்கள்தானே தேர்வு செய்வோம். இது உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவான ஒன்று. அவர்கள் புரிந்துகொண்டுதான் புரியாமல் பேசுகிறார்களா? அல்லது எப்படிப் பேசுகிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் அதிமுக தலைமையிலான கூட்டணிதான். அதிமுக பெரும்பான்மை பெற்று கட்சி அறிவித்த எடப்பாடி பழனிசாமிதான் முதல்வராக வருவார்’’ என அவர் தெரிவித்தார்.