மேற்குவங்கத்தில் 8 பேரையாவது சுட்டு கொன்றிருக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ராகுல் சின்ஹா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரத்து அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் முதல் 4 கட்டத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இன்னமும் 4 கட்டத் தேர்தல்கள் நடைபெற வேண்டும். இதனிடையே, 4-வது கட்ட வாக்குப்பதிவின் போது வன்முறை சம்பவங்கள் வெடித்தன. அப்போது, மத்தியப்படைகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். பாதுகாப்பு படையினரை முற்றுகையிட்டு அவர்களது துப்பாக்கிகளை பறிக்க முயன்றதால் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடையே பேசிய பாஜக மூத்த தலைவர் ராகுல் சின்ஹா 4 பேருக்கு பதில் 8 பேரையாவது சுட்டு கொன்றிருக்க வேண்டும் என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு  அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் பாஜக மூத்த தலைவர் ராகுல் சின்ஹா 48 மணி நேரம் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இன்று முதல் நாளை மறுநாள் 12 மணி வரை பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முதல்வர் மம்தாபானர்ஜிக்கு பிரசாரம் செய்ய ஒருநாள் தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.