பனங்காட்டு நரி எடப்பாடி போன்ற டெல்லி எடுபிடிகள் சலசலப்புக்கோ, பொய் வழக்குகளில் மிரட்டலுக்கும் என்றைக்கும் அஞ்சாது என மு.க.ஸ்டாலின் கூறியதற்கு பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா பதிலடி கொடுத்துள்ளார். 

3 மாதங்களுக்கு முன்பு  தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்த காரணத்தால் நேற்று அதிகாலையில் திமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதியை வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த கைதுக்கு திமுக தலைவர் ம.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், முதல்வர்,துணை முதல்வர், அமைச்சர்களின் ஊழல் மற்றும் கொரோனாவின் நிர்வாக தோல்வியை மறைக்கவே  குரோத எண்ணத்துடன், ஆர்.எஸ்.பாரதியை அதிகாலையில் கைது செய்துள்ளனர். 

அதிகாரம் மற்றும் அராஜகத்தின் துணையோடு நடத்தப்படும் இதுபோன்ற நள்ளிரவு கைது நாடகங்களைப் பார்த்தெல்லாம் திமுக, மிரளாது; நடுங்காது. தமிழக மக்களும் அஞ்சமாட்டார்கள். இந்த மாபெரும் மக்கள் இயக்கம்; பனங்காட்டு நரி. எடப்பாடி பழனிசாமி போன்றவர்களின் சலசலப்புகளுக்கோ, பொய் வழக்குகளின் மிரட்டலுக்கோ என்றைக்கும் அஞ்சாது என தெரிவித்திருந்தார். 

இதனிடையே, அண்மையில் திமுக எம்.பி.க்கள், தயாநிதி மாறனும், டி.ஆர்.பாலுவும் திமுக சார்பில் பெறப்பட்ட மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை தலைமை செயலாளரிடம் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, தலைமை செயலாளர் தங்களை மூன்றாம் தர மக்கள், அதாவது தாழ்த்தப்பட்ட மக்களை போல நடத்தியதாக கூறினார். தயாநிதி மாறனின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

தயாநிதி மாறன் மனதில் வேரூன்றி இருக்கும் சாதியவாதத்தால் தான், அவர் இப்படியான கருத்தை தெரிவித்திருக்கிறார் என்று எதிர்ப்புகள் கிளம்பின. திமுகவின் கூட்டணியில் இருக்கும் விசிக தலைவர் திருமாவளவனும் தயாநிதி மாறனின் கருத்துக்கு அதிருப்தியும் கண்டனமும் தெரிவித்திருந்தார். தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தயாநிதி மாறன், டி.ஆர். பாலு மீது கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆர்.எஸ்.பாரதி கைதையடுத்து தாங்களும் கைது செய்யப்படலாம் என்ற பீதியில் சென்னை உயர்நீதிமன்றத்தில், முன் ஜாமீன் கோரியும், தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரியும் மனு தாக்கல் செய்தனர். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் திமுக எம்பிக்கள் தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு ஆகியோரை மே 29ம் தேதி வரை எந்தவித கடும் நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டது. இதற்கு பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா டுவிட்டர் பதிவில் கடுமையான விமர்சனம் செய்துள்ளார். அதில், ஆமாம் பதறிப் போய் முன் ஜாமீன் வாங்குறது பனங்காட்டு நரியா. இல்ல குள்ளநரியா? என கேள்வி எழுப்பியுள்ளார்.