பதறிப் போய் முன் ஜாமீன் வாங்குறது பனங்காட்டு நரியா. இல்ல குள்ளநரியா என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் அன்பகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய திமுக எம்.பி.யும் அக்கட்சியின் அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ். பாரதி, நீதிபதிகள் பதவி குறித்து பேசும்போது, “அது தலித்துகளுக்கு திராவிட இயக்கம் போட்ட பிச்சை’ என்று பேசிய பேச்சு சர்ச்சையானது. அந்தப் பேச்சு தொடர்பாக காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. இந்நிலையில் சுமார் 100 நாட்கள் கடந்து அந்த வழக்கில் ஆர்.எஸ். பாரதியை போலீஸார்  நேற்று கைது செய்தனர். பின்னர் அவர் இடைக்கால ஜாமினில் வெளிவந்தார். ஆர்.எஸ். பாரதியின் கைதுக்கு திமுக கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன. அதிமுக, பாஜக. தமாகா ஆகிய கட்சிகள் கைது நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்தன.
இந்நிலையில் ‘ நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களா’ என்று பேசிய விவகாரத்தில் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் திமுக எம்.பி. தயாநிதி மாறனும் இன்னொரு எம்.பி. டி.ஆர்.பாலுவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றனர். டி.ஆர்.பாலுவும் தயாநிதி மாறானும் அவசரமாக முன்ஜாமின் பெற்றதையும்;  ‘அம்பட்டன்’ என்று பேசிய திமுக எம்.எல்.ஏ. பி.டி.ஆர். தியாகராஜனும், அதற்காக மன்னிப்பு கேட்டதையும் வைத்து சமூக ஊடங்களில் பாஜகவினர் கேலியும் கிண்டலும் விமர்சனமும் செய்துவருகின்றனர்.

 
இந்நிலையில் இதுதொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பதிவில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவும் தன்னுடைய கருத்தைப் பதிவிட்டுள்ளார். அதில், “ஆமாம், பதறிப் போய் முன் ஜாமீன் வாங்குறது பனங்காட்டு நரியா. இல்ல குள்ளநரியா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஹெச்.ராஜா. இன்னொரு ட்விட்டர் பதிவில், “இவர்கள் DNA தலித் விரோதமே. 1919 முதல் 1936 வரை நீதிக்கட்சி மந்திரி சபையில் ஒரு பட்டியல் சமுதாயத்தவர்கூட அமைச்சராகப்படவில்லை. அதேபோல் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தலித்துகளை அனுமதிக்க கூடாது என்றார் ஈ.வெ.ரா.” என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.