தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பாஜகவில் பிரபலங்கள் மற்றும் மாற்றுக் கட்சியினரை சேர்க்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. திரைப்படத் தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் உள்பட மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் பாஜகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் கட்சித் தலைவர் எல்.முருகன் 'வெற்றிவேல் முருகா' என்ற மொபைல் போன் காலர் டியூனை வெளியிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
“திமுக தலைவர் ஸ்டாலினுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இந்த கொரோனா காலத்தில் தமிழகத்துக்கு மட்டும் மத்திய அரசு 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கியுள்ளது. அதையெல்லாம் மறைத்து இஷ்டத்துக்கு மத்திய அரசை ஸ்டாலின் குற்றம் சொல்கிறார். சமூக நீதி குறித்தெல்லாம் ஸ்டாலின் பேசுகிறார். அவருடைய கட்சி எம்பிக்கள் தலைமை செயலரை சந்தித்துவிட்டு, “நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா” என்று கேட்டனர். அதையே ஸ்டாலின் கண்டிக்கவில்லை.

 
இன்னொரு எம்.பியும் கட்சி நிர்வாகியுமான ஆர்.எஸ்.பாரதி எஸ்.சி. வகுப்பைச் சேர்ந்தவர்கள், நீதிபதிகளாக உயர்ந்ததை கொச்சைப்படுத்தி பேசினார். இதற்கும் மு.க. ஸ்டாலின் வாய் திறக்கவில்லை. எனவே சமூக நீதி குறித்து பேசுவதற்கு திமுகவுக்கு எந்த அருகதையும் இல்லை. நாட்டில் அதிக எஸ்.சி. வகுப்பைச் சேர்ந்த எம்.பி.,க்கள் உள்ள கட்சியாக பாஜகத்தான் உள்ளது.
தமிழர்கள் வீடுகளில் தினமும் காலையில் ஒலிப்பது கந்த சஷ்டி கவசம்தான். அதை கருப்பர் கூட்டம் என்ற ஒரு சின்ன கூட்டம் ஆபாசமாக பேசியது. அதை இன்று வரை யாரும் கண்டித்துப் பேசவில்லை. நடிகர்கள் சரத்குமார், ரஜினி ஆகியோர் கண்டித்தனர். மற்ற கட்சிகள் எல்லாம் கண்டனம் தெரிவிக்கவே தயங்கின. ஸ்டாலின் இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை. அந்தக் கருப்பர் கூட்டத்துக்கும் ஸ்டாலினுக்கும் என்ன தொடர்பு என்பதை விளக்க வேண்டும்.” என்று எல்.முருகன் தெரிவித்தார்.