தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பாஜகதான் உண்மையான எதிர்க்கட்சி என்று பாஜகவினர் பேசி வருகிறார்கள். இதை மறுத்து அதிமுக தலைவர்களும் தொடர்ந்து பதில் அளித்து வருகிறார்கள். இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறார் என்று சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவரும் நடிகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார். சேலத்தில் சரத்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை என்பது எல்லாம் பெரிய அளவில் ஏதும் இல்லை. பாஜக மதத்தை வைத்து அரசியல் நடத்துவதாக கூறப்பட்டாலும்கூட, பிற மதம் பற்றி புண்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட பாஜகவினர் மீது கட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருக்கிறது.

இனிவரும் காலத்தில் அனைவருமே சமம் என்ற சமத்துவ சூழ்நிலையை மத்திய அரசு பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரதான எதிர்க்கட்சியாகத்தான் செயல்பட்டு வருகிறார். அவருடைய கருத்துக்கு பதில் சொல்ல வேண்டியது ஆளுங்கட்சியினருடைய கடமை ஆகும். எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் கருத்துகளை முன் வைக்காத நிலையில் பாஜக முன்வைப்பதில் எந்தத் தவறும் இல்லை. சமத்துவ மக்கள் கட்சியை பொறுத்தவரை எந்தத் தொய்வும் இல்லை. தேர்தலில் போட்டியிடுவதால் தங்கள் கையில் இருக்கும் பணத்தை இழக்க நேரிடும் என்பதால்தான் கட்சி நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட தயங்குகிறார்கள்.

என்றாலும் எங்கள் கட்சியினர் மக்கள் பணியில் மிகச் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார்கள். ஜனநாயக அரசியல் என்பது தற்போதைய சூழ்நிலையில் இல்லாமல் உள்ளது. கோடி கோடியாகத் தேர்தலில் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால்தான் சராசரி குடிமகன் அரசியலுக்கு வர முடியாத நிலை உருவாகி இருக்கிறது” என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.
