பாஜக எம்.எல்.ஏ ‘வானதி’ உட்பட 7 பேர் விடுதலை… பாஜக மீது அதிமுகவினர் கொடுத்த வழக்கில் “பரபரப்பு‘ தீர்ப்பு
கோவையில் அதிமுகவினர் அளித்த புகாரின் பேரில் வானதி சீனிவாசன் உட்பட 7 பேர் மீது நடைபெற்று வந்த வழக்கில்அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது, பாஜக சார்பில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களாக போட்டியிட்ட வானதி சீனிவாசன் பிரச்சாரம் முடிந்து கடைவீதி பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றார். அப்போது அதிமுகவை சேர்ந்த முன்னாள் கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் ஆதிநாராயணன் உட்பட அதிமுக நிர்வாகிகள் பாஜகவினர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் தகராறாக மாறியதாக புகார் எழுந்தது.
இதைதொடர்ந்து பாஜகவினர் தன்னை தாக்கியதாக கூறி ஆதிநாராயணன் அளித்த புகாரில், எம்.எல்.ஏவானதி ஸ்ரீனிவாசன் உட்பட பாஜக நிர்வாகிகள் ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் இந்த வழக்கு கோவை 5 வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட பா.ஜகவை சேர்ந்த கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், கண்மணி பாபு, மோகனா, குணசேகரன், நாகராஜ், சண்முகசுந்தரம் மற்றும் பாபு ஆகிய 7 பேரை விடுவித்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.