ரஜினி கட்சி தொடங்குவது மகிழ்ச்சி. நல்லவர்கள் அரசியலுக்கு வருவது நாட்டிற்கு நல்லது என பாஜக முன்னாள் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் 1996-ல் திமுக கூட்டணிக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்தார். அதன்பின்னர் நேரடி அரசியலில் ஈடுபடவில்லை. 2017 டிசம்பர் இறுதியில் அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்றும், தான் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகவும் ரஜினி அறிவித்தார். அதன் பின்னர் தீவிர அரசியல் குறித்து எந்தக் கருத்தும் சொல்லாமல் இருந்தார்.

ரஜினி மக்கள் மன்றம் தொடங்கப்பட்டது. ஆனாலும், அரசியல் கட்சியைத் தொடங்காமல் அறிவிப்பு வெளியிடாமல் இருந்த நிலையில், கடந்த நவம்பர் 30ம் தேதி அன்று ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களிடம் கருத்துகளைக் கேட்டார். இந்தக் கூட்டத்தில் தனது உடல் நிலை, நேரடி அரசியலில் ஈடுபட முடியாத நிலை, அரசியல் கட்சியைத் தொடங்குவதா? உடல்நிலையைப் பார்ப்பதா? அரசியல் கட்சிகளின் நண்பர்கள் அழைப்பை ஏற்று வாய்ஸ் கொடுக்கலாமா? அல்லது மவுனமாக இருக்கலாமா? ஆகியவை குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் ரஜினி ஆலோசிக்கப்பட்டது. 

இதனையடுத்து, ரஜினி ட்விட்டர் பக்கத்தில் தனது முடிவை ரஜினி தெரிவித்துள்ளார். அதில் ஜனவரியில் கட்சி தொடங்க உள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு டிசம்பர் 31ம் தேதியன்று வரும் என்றும் தெரிவித்துள்ளார். இவரது அரசியல் பிரவேசம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையத்து, ரஜினியின் அரசியலுக்கு பின்னால் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இருப்பதாக தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றது. 

இந்நிலையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- ரஜினி கட்சி தொடங்குவது மகிழ்ச்சி. நல்லவர்கள் அரசியலுக்கு வருவது நாட்டிற்கு நல்லது என கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதன் பின்னணியில் பாஜக இல்லை. பாஜக எப்போதுமே பின்னணியில் இருக்காது, முன்னணியில் தான் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.