bjp is moving towards its target
கடும் சர்ச்சைகளுக்கு இடையே கர்நாடகாவின் 23வது முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுக் கொண்டார்.
தனித்தோ அல்லது கூட்டணியுடனோ பாஜக ஆட்சி கட்டிலில் அமரும் 21வது மாநிலம் கர்நாடகா. காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற முழக்கத்துடன் ஒவ்வொரு மாநிலமாக ஆட்சியை பிடித்து வருகிறது பாஜக. கடந்த ஓராண்டில் தேர்தல் நடந்த உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கோவா, குஜராத், இமாச்சல பிரதேசம், திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் தனித்தோ அல்லது கூட்டணியிடனோ ஆட்சியமைத்துள்ளது.
தற்போது கடும் சர்ச்சைகளுக்கு இடையே கர்நாடகாவிலும் பாஜக ஆட்சியமைத்துள்ளது. ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்காத நிலையில், தனிப் பெரும்பான்மையுடன் உள்ள பாஜகவிற்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை பெற்றுள்ள நிலையில், தனிப்பெரும்பான்மை கொண்ட பாஜகவிற்கு ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததை எதிர்த்து காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தை நாடியது.
நள்ளிரவில் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், எடியூரப்பா முதல்வராக பதவியேற்க தடை விதிக்க முடியாது என தெரிவித்துவிட்டது. இதையடுத்து இன்று காலை கர்நாடகாவின் 23வது முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் வஜூபாய் வாலா அவருக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார். பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவிற்கு 15 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளார் ஆளுநர் வஜூபாய் வாலா.
கர்நாடகாவில் ஆட்சியை பிடித்ததன் மூலம், 21 மாநிலங்களில் ஆளும் கட்சியாகவோ அல்லது ஆளும் கூட்டணியிலோ பாஜக உள்ளது.
பாஜக தனித்து ஆளும் மாநிலங்கள்:
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், குஜராத், இமாச்சல பிரதேசம், ஹரியானா, உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய 9 மாநிலங்களிலும் பாஜக தனித்து ஆட்சி நடத்துகிறது. தற்போது கர்நாடகாவில் ஆட்சியமைக்க உள்ளது.
ஆளும் கூட்டணியில் பாஜக இருக்கும் மாநிலங்கள்:
மகாராஷ்டிரா, அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், கோவா, ஜம்மு காஷ்மீர், பீகார், சிக்கிம், திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.
தற்போது கர்நாடகாவில் ஆட்சியமைத்துள்ளது. எனினும் 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபித்தாக வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த பிறகே கர்நாடகாவின் நிலை தெளிவாகும். கர்நாடகாவுடன் சேர்த்து தற்போதைக்கு 21 மாநிலங்களில் பாஜக தனித்தோ அல்லது கூட்டணி ஆட்சியிலோ உள்ளது.
இந்த ஆண்டின் இறுதியில் பாஜக ஆட்சியில் உள்ள மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இவற்றிலும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக உள்ளது. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் வர உள்ள நிலையில், பாஜகவிற்கு மத்திய பிரதேச, ராஜஸ்தான் தேர்தல்களும் மிகவும் முக்கியமானவை.
தற்போதைய நிலையில், பஞ்சாப் மற்றும் மிசோரமில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி செய்கிறது.
