BJP in high tension Dinakaran for Supporters ignored the Edapadi palanisamy meeting

குடியரசு தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து ஆலோசிப்பதற்காக, அதிமுக எம்.எல்.ஏ க்களுடன் நேற்று முதல்வர் எடப்பாடி ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ க்கள் 34 பேரும் புறக்கணித்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

எனினும், அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி, பாஜக வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என, எம்.எல்.ஏ க்கள் கூட்டத்தில் முடிவெடுத்து உள்ளதாக அறிவித்தார்.

முன்னதாக, எடப்பாடி தலைமையில் நடந்த இப்தார் நோன்பு நிகழ்ச்சியையும், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ க்கள் 30 பேர் புறக்கணித்தனர்.

குடியரசு தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து பேசுவதற்காகவே, தம்பிதுரை, தினகரன் ஆகியோரை தம்மை வந்து சந்திக்குமாறு சசிகலா கூறி இருந்தார். அதனால், நேற்று முன்தினம் அவர்கள் சசிகலாவை சந்தித்தனர்.

அப்போது, பிரதமர் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் ஆதரவு கோரியதை சசிகலாவிடம் தெரிவித்தார் தம்பிதுரை. அத்துடன், தினகரனின் நடவடிக்கைகள், ஆட்சி மற்றும், சீராய்வு மனு விஷயத்தில் சிக்கலை ஏற்படுத்தி வருவதாகவும் கூறினார்.

அவரிடம் பேசிய சசிகலா, காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருப்பதால், பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதை தவிர வேறு வழியில்லை என்று குறிப்பிட்டார். அதை பாஜக தலைவர்களிடம் கூறுமாறும், தம்பிதுரையிடம் சொல்லி அனுப்பினார்.

பின்னர் தினகரனிடம் பேசிய சசிகலா, ஆட்சிக்கு பாதிப்பு வராத வகையிலும், டெல்லி மேலிடத்தின் வெறுப்பை சம்பாதிக்காத வகையிலும் நடந்து கொள்ளுமாறு கூறி இருக்கிறார்.

ஆனாலும், தம் குடும்ப உறவுகளே தமக்கு எதிராக செயல்படுவதை கண்டு வெறுத்து போன தினகரன், தம்முடைய அதிகாரத்தை அரசியலிலும், குடும்ப உறவுகள் மத்தியிலும் நிலைநாட்டும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

அதன் காரணமாகவே, முதல்வர் எடப்பாடியின் இப்தார் நோன்பு, எம்.எல்.ஏ க்கள் ஆலோசனை கூட்டம் ஆகியவற்றை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ க்கள் 34 பேரும் புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

இதை அறிந்த டெல்லி மேலிடம், தினகரன் மீது மேலும் அதிருப்தியில் இருப்பதாக, டெல்லிக்கு நெருக்கமான தமிழக தலைவர்கள் கூறுகின்றனர்.

அதன் விளைவு, குடியரசு தலைவர் தேர்தல் முடிந்தவுடன் வெளிப்படும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.